2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

Meenakshi
Dec 17, 2025,05:01 PM IST

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். ஆட்சியர்களிடம் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்தக்கூடாது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை   தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆங்காங்கே நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக அலங்காநல்லூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றவையாகும். இந்த ஜல்லிக்கட்டு பேட்டியினை காண வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருவது வழக்கம். தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக ஜல்லிக்கட்டு திகழ்கிறது.




தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் காளை உரிமையாளர்கள் தங்கள் காளைகளைத் தயார்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு மாநில அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 


அதன்படி, மாவட்ட ஆட்சியா்களிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு உள்பட எந்த போட்டிகளையும் நடத்தக் கூடாது. காளைகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள கூடாது. முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாமல் எந்த போட்டியும் நடத்த ஒப்புதல் அளிக்க கூடாது. விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி காளைகள் மற்றும் கால்நடைகளுக்கு எந்த விதமான தீங்கும் ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும். காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதையும், பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்வது அவசியம். இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வடமாடு, மஞ்சு விரட்டு, எருது விடும் நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.