கிராமங்களில் உள்ள சிறு குறு கடைகளுக்கு உரிமம் தேவையில்லை: தமிழக அரசு!

Meenakshi
Jul 31, 2025,06:56 PM IST

சென்னை: கிராமப்புற பஞ்சாயத்து சிறு, குறு கடைகளுக்கு உரிமம் பெறத் தேவையில்லை. உரிமம் கட்டாயம் என்ற செய்தி தவறானது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து வணிகம் வழங்குவதற்கான விதிகள் 2025 அரசு ஆணையின் படி, தமிழகத்தில் கிராம ஊராட்சிகளில் 48 வகையான சிறு தொழில்கள் மற்றும் 119 வகையான சேவைத்தொழில்களில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் இனி தங்கள் தொழிலை தொடர வேண்டுமெனில் கண்டிப்பாக உரிமம் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சமீபத்தில்,  டீ கடைகள் முதல் திருமண மண்டபங்கள் வரை ரூ.250 முதல் ரூ.50,000 வரை கட்டணம் செலுத்தி தொழில் உரிமம் பெறுவது கட்டாயம் என்று அறிவித்திருந்தது.




இந்த அறிவிப்பிற்கு சிறு, குறு வியாபாரிகளிடையே கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. இதற்கு வணிகர் நல சங்கங்களும் சிறு கடைகளுக்கு இதில் விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வந்தனர். அத்துடன் அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு கிராமப்புறத்தில் செயல்படும் சிறு, குறு வணிகர்கள் தொழில் உரிமம் பெற தேவையில்லை என அறிவித்துள்ளது. 


இந்தத் தளர்வு, கிராமப் பகுதிகளில் இயங்கும் சிறு மற்றும் குறு கடைகளுக்கு மட்டுமே பொருந்தும். இதில் மளிகைக் கடைகள், பொது வணிகக் கடைகள் மற்றும் சிறிய அளவிலான சில்லறை விற்பனைக் கடைகள் அடங்கும். இந்த முடிவு, கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும், சிறு வணிகர்களின் சுமையை குறைக்கவும் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.