பொங்கல் பரிசு தொகுப்பு.. ஜனவரி 8ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Su.tha Arivalagan
Jan 02, 2026,05:25 PM IST

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பை ஜனவரி 8ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.


தமிழகத்தின் மிக முக்கியப் பண்டிகையான தைப்பொங்கலை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2026-ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து ஜனவரி 8-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், பொங்கல் பரிசு தொகுப்பாக, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு ஆகியவற்றை, மொத்த செலவினத் தொகை 248.66 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் வாயிலாக, 2.22 கோடி கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்ய, நிதி ஒதுக்கி அரசு ஆணையிடுகிறது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


வழக்கம் போல, ரேஷன் கடைகளில் கூட்டத்தைத் தவிர்க்க டோக்கன் முறை பின்பற்றப்படும். குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் சென்று பொதுமக்கள் தங்களது பொங்கல் பரிசைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப்பணம் குறித்த அறிவிப்பு ஏதும் இடம் பெற வில்லை. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தாண்டு பொங்கல் பரிசாக 3,000 அல்லது 5,000 வழங்கப்படலாம் என்று பொதுமக்கள் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.