எரிபொருள் சிக்கனம்: தமிழக ஆளுநரின் பாதுகாப்பு வாகன எண்ணிக்கை குறைப்பு!

Su.tha Arivalagan
May 16, 2026,01:28 PM IST

சென்னை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைத்து, எரிபொருள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் மாசைக் குறைக்க விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பிரதமரின் இந்த வேண்டுகோளைத் தீவிரமாகப் பரிசீலித்த தமிழக ஆளுநர் மாளிகை, ஆளுநரின் பாதுகாப்புப் பிரிவில் இந்த அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.


இதுவரை தமிழக ஆளுநர், அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகச் செல்லும் போது, பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது பாதுகாப்புப் படையில் (Convoy) மொத்தம் 10 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த நீண்ட வாகன அணிவகுப்பு அதிகளவிலான எரிபொருள் பயன்பாட்டிற்கு வழிவகுத்தது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய முடிவின்படி, எரிபொருள் சிக்கனத்தை மட்டுமே முதன்மையாகக் கருத்தில் கொண்டு, இந்த பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 10-லிருந்து வெறும் 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.


பொதுமக்களிடையே வரவேற்பு:




உயரிய பதவிகளில் இருப்பவர்கள் தங்களின் பாதுகாப்புப் ஆடம்பரத்தைக் குறைத்துக் கொண்டு, நாட்டின் வளங்களைச் சேமிக்க முன்வந்திருப்பது அதிகார வட்டாரங்களில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஆளுநரின் இந்த எளிய மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த நடவடிக்கை, பிற மாநில உயர் அதிகாரிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையும் எனப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.பாதுகாப்புப் பிரிவில் வாகனங்கள் குறைக்கப்பட்டாலும், ஆளுநருக்கான உரிய பாதுகாப்பு நடைமுறைகளில் எந்தவித தொய்வும் ஏற்படாத வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


பிரதமர் மோடி ஏற்கனவே தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை பாதியாக குறைத்து விட்டார். அவரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் குறைத்துள்ளார். இவர்களை தொடர்ந்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிசும் சமீபத்தில், தலைமை செயலகத்திற்கு ஆட்டோவில் வந்தார். 


பீகார் முதல்வர் இன்னும் ஒரு படி மேலே போய், தனது வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு நடந்தே சென்றார். இவர்களை தொடர்ந்து தற்போது தமிழக கவர்னரும் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.