உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்!

Su.tha Arivalagan
Oct 31, 2026,10:08 AM IST

சென்னை: உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் (அல்லது) மின்கலனால் இயங்கும் உபகரணம் முதற்கட்டமாக 400 உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படவுள்ளது.


இதுதொடர்பாக அரசு அறிவித்துள்ள அறிவிப்பில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:




- இந்த ஸ்கூட்டரைப் பெற விரும்புவோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை (UDID) வைத்திருக்க வேண்டும்.


- உயரம் குறைந்த, கைகள் நல்ல நிலையில் உள்ள 18 வயது முதல் 65 வயது வரையுள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.


- கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு (18 வயது மேற்பட்டவர்கள்) முன்னுரிமை அடிப்படையிலும், எஞ்சிய ஸ்கூட்டர்கள் பணிபுரிபவர் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும்.


- இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் அல்லது மின்கலனால் இயங்கும் உபகரணம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று மட்டுமே வழங்கப்படும்.


- பணிபுரிபவர்கள் / சுயதொழில் புரிபவர்கள் மற்றும் மாணவ / மாணவியர் உண்மைச் சான்று வழங்க வேண்டும்.


இந்தத் திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் பெற விரும்புவோர், சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை அணுகி விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.