பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது.. முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு

Su.tha Arivalagan
Aug 24, 2026,10:47 AM IST

சென்னை: சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக அமைப்பதாக முன்மொழியப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டம் அதிகாரப்பூர்வமாகக் கைவிடப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. மக்களுக்கு எவ்வித பாதிப்போ அல்லது எதிர்ப்போ இல்லாத மாற்று இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.


சட்டசபையில் இன்று இந்த அறிவிப்பை முதல்வர் விஜய் வெளியிட்டார். அத்தோடு மேலும் சில புதிய திட்டங்களை அவர் வெளியிட்டார்.


தமிழக அரசு 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டத்தின் கீழ் மாநிலத்திலுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் இலவச சமையல் எரிவாயு உருளைகள் (Gas Cylinders) வழங்கும் புதிய திட்டத்தையும் அறிவித்துள்ளது. வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 14 முதல் இத்திட்டம் அமலுக்கு வருகிறது.




ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கு கீழ் உள்ள குடும்பங்கள், சிறு மற்றும் குறு விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் குடும்பங்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினர் உட்பட சுமார் 1 கோடியே 30 லட்சம் குடும்பங்கள் பயனடைவர்.


3 சிலிண்டர்களுக்கான தொகை நேரடிப் பணப்பரிமாற்றம் மூலம் நுகர்வோரின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகவே செலுத்தப்படும். இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் தோராயமாக ரூ 4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.


மகளிர் இலவசப் பேருந்துத் திட்டம்


இதேபோல வெற்றி பயணம் திட்டம் என்ற பெயரில் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை விரிவாக்கம் செய்யப்படுவதாகவும் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.


மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயங்கும் எக்ஸ்பிரஸ் (Express), எல்.எஸ்.எஸ் (LSS) மற்றும் டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம்.


மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், வெளியூர் (Mofussil) மற்றும் மலைப் பகுதிகளில் இயங்கும் சாதாரண கட்டண அரசுப் பேருந்துகளிலும் இலவசமாகப் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதி முதல் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.


இத்திட்டத்திற்கு எவ்வித வருமான வரம்போ அல்லது பயணங்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடோ கிடையாது. பெண்களுடன் சேர்த்து திருநங்கைகளும் இத்திட்டத்தின் கீழ் இலவசமாகப் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.