ரூ. 5000.. மகளிருக்கு காலையிலேயே சர்ப்பிரைஸ் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Su.tha Arivalagan
Feb 13, 2026,10:08 AM IST

சென்னை: இந்தியாவில் தேசிய மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழ்நாட்டு மகளிருக்கு காலையிலேயே ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து விட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் உரிமைத் தொகை பெற்று வரும் மகளிருக்கு ரூ. 5000 பணம் அவர்களது கணக்கில் இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது.


கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் பிறந்த நாள் இன்று. இது தேசிய மகளிர் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தமிழ்நாட்டு மகளிருக்கு ஹேப்பி நியூஸ் கொடுத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவிலிருந்து:




வணக்கம். மிகவும் முக்கியமான ஒரு விஷயத்திற்காகத்தான் இந்த வீடியோ. இன்று காலையில் நமது அரசின் சார்பில் 5,000 ரூபாய் உங்கள் கணக்கிற்கு வந்திருக்கும். எதுக்காக இந்தப் பணம்?


நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா உச்சத்தில் இருந்தது. அதைச் சமாளித்து மக்களின் உயிரைக் காத்தது மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க 4,000 ரூபாய் நிவாரணத் தொகையும் வழங்கினோம். கடந்த கால ஆட்சியாளர்கள் விட்டுச் சென்ற கடுமையான நிதி நெருக்கடியைச் சமாளித்து, ஆட்சிக்கு வந்ததுமே பல திட்டங்களை நிறைவேற்றினோம்.


நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்தேன். அப்போதெல்லாம் இது சாத்தியமே இல்லை என்று சிலர் சொன்னார்கள். ஆனாலும் நிதி நெருக்கடியைச் சமாளித்து, ஒன்றிய அரசினுடைய ஓரவஞ்சனையையும் மீறி, கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை’ வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறோம்.


முதலில் 1 கோடியே 13 லட்சம் மகளிருக்குப் பயனளித்த இந்தத் திட்டம், அண்மையில் விரிவுபடுத்தப்பட்டு இப்போது 1 கோடியே 15 லட்சம் குடும்பத் தலைவிகள் பயன்பெற்று வருகிறார்கள். இது வெறும் நிதியுதவி அல்ல; சமூகத்தில் பெண்கள் ஆற்றும் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காகக் கொடுக்கப்படுகிற உரிமைத் தொகை.


இந்தத் தொகையை வைத்து அன்றாட வீட்டுச் செலவுகள், மருத்துவச் செலவுகள், குழந்தைகளுக்கான கல்விச் செலவுகள் எனப் பல அத்தியாவசியத் தேவைகளை மகளிர் தாங்களே நிவர்த்தி செய்ய இத்திட்டம் வழிவகை செய்தது.


ஆனால், இதற்கு எதிராக டெல்லியில் இருக்கக்கூடிய ஒரு கூட்டமும், தமிழ்நாட்டில் அவர்களுக்கு அடிமையாக இருக்கக்கூடிய இன்னொரு கூட்டமும், வரும் சட்டமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தச் சூழ்ச்சி செய்வதாகத் தகவல் வருகிறது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் சிலர் முயற்சி செய்வதாகச் செய்திகள் வருகின்றன.


இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டால் நீங்கள் எவ்வளவு சிரமப்படுவீர்கள் என்பது உங்கள் வீட்டில் ஒருவனாக இருக்கும் எனக்குத் தெரியும். எனவே, நான் ஒரு முக்கியமான முடிவை எடுத்திருக்கிறேன்:


பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகை (3,000 ரூபாய்). கோடைக்காலச் செலவுகளைக் கருத்தில்கொண்டு கூடுதலாக 2,000 ரூபாய் சிறப்புத் தொகை. ஆக மொத்தம் 5,000 ரூபாய் இன்று உங்கள் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.


இந்த 5,000 ரூபாயை அடுத்த மூன்று மாதங்களுக்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால், கொஞ்சம் கவனமாகச் செலவு செய்யுங்கள்; முடிஞ்ச அளவுக்குச் சேமிக்கவும் பாருங்கள்.


அடுத்த திராவிட மாடல் 2.0 ஆட்சிக் காலத்தில், உங்கள் உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். சொன்னதைச் செய்யும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி இது.


எந்தத் தடை வந்தாலும் அதை எல்லாம் தாண்டித் தமிழ்நாட்டை வெல்ல வைப்போம். ஒன்றாக இணைவோம்! என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்