விஜய் படைத்த புதிய சாதனை: தமிழ்நாட்டின் முதல் கூட்டணி அரசு.. நீண்ட கால கனவு நனவானது!

Su.tha Arivalagan
May 21, 2026,12:26 PM IST

சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் பல தசாப்தங்களுக்குப் பிறகு, ஒரு புதிய அரசியல் திருப்பமாக ‘கூட்டணி ஆட்சி’ முறை முறைப்படி அரியணை ஏறியுள்ளது. இந்த வரலாற்றைப் படைத்துள்ள பெருமை முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கே உரித்தானது.


விஜய் அரசியலுக்கு வந்தது முதலே தொடர்ந்து வரலாறு படைத்து வருகிறார். அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் ஒரு வரலாறாக மாறி வருவதை ஒட்டுமொத்த இந்தியாவும் வியந்து பார்த்து வருகிறது.


நேற்று வரை தனிக்கட்சி ஆட்சியாக இருந்து வந்த தவெக அரசு இன்று முதல் தவெக கூட்டணி அரசாக மலர்ந்து புதிய வரலாற்றை எழுதியுள்ளது. ஆம் இதுதான் தமிழ்நாட்டின் முதல் கூட்டணி அரசாகும்.


நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு தனிக்கட்சிக்கும் முழு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தமிழக வெற்றி கழகம் (தவெக) அதிக இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து, முற்போக்குக் கொள்கையுடைய பிற கட்சிகளையும் அரவணைத்து, "ஆட்சியிலும் அதிகாரம், பங்களிப்பிலும் சமத்துவம்" என்ற தனது முழக்கத்தின்படி விஜய் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளார்.


வியப்பூட்டும் புதிய அமைச்சரவை: 




இன்று பதவியேற்றுள்ள இந்த புதிய அமைச்சரவை, தமிழக அரசியல் இதுவரை கண்டிராத பல வியப்பான மற்றும் முற்போக்கான விஷயங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.


தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தவெக கூட்டணி அரசை அமைத்துள்ளது. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் உண்மையான ‘கூட்டணி அரசு’ அமைந்துள்ளது.


1952ல் ராஜாஜி முதல் கூட்டணி அரசை அமைத்தார். காமன்வீல் உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைத்தார். அவர்கள் அமைச்சரவையில் இடம் பெறாமல்தான் ராஜாஜி அரசுக்கு ஆதரவு அளித்தனர். அதன் பிறகும் கூட கலைஞர் கருணாநிதி பெரும்பான்மை பலம் பெறத் தவறிய நிலையில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அரசமைத்தார். ஆனால் அமைச்சரவையில் யாருக்கும் பங்கு தரவில்லை.


ஆனால் விஜய் புதிய வரலாறு படைத்துள்ளார். கட்சி ஆரம்பித்தபோதே, தனிப்பெரும்பான்மை பலம் பெற்றாலும் கூட கூட்டணி ஆட்சியே அமைப்போம் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் அப்போது அனைவரும் அவரை குறைத்து மதிப்பிட்டு விட்டதால் கூட்டணிக்கு யாரும் வரவில்லை. இதனால் தவெக தனித்தே போட்டியிட்டது.


இப்போது விஜய் ஆட்சியமைத்துள்ளார். அத்தோடு தனது அரசுக்கு ஆதரவு தருவோருக்கு அமைச்சர் பதவிகளையும் கொடுத்து அசத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சி அமைச்சர் பதவி கேட்டுத்தான் கூட்டணிக்கு வந்தது. ஆனால் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை நிபந்தனை இல்லாமல் ஆதரவு தருகின்றன. அப்படி இருந்தும் கூட அவர்களுக்கும் அமைச்சர் பதவி தர விரும்பி அழைத்துள்ளார் விஜய்.


இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் வேண்டாம் என்று கூறி விட்டன. விசிக, முஸ்லீம் லீக் இணைய ஆர்வமாக உள்ளன. அவர்களுக்கும் விஜய் அமைச்சரவையில் இடம் கிடைக்கவுள்ளது.


பாரம்பரிய அரசியல் முகங்களைத் தாண்டி, படித்த இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்களுக்கு இந்த அமைச்சரவையில் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. விஜய் அமைச்சரவையில் 4 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். அதே போல் விஜய் ரசிகர் மன்றத்தில் ஆரம்பித்தில் இருந்தே இருந்த 16 பேருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.


பெரியார், அம்பேத்கர் மற்றும் காமராசரின் கொள்கை வழியில், அனைத்துச் சமூகத்தினருக்கும் சமமான அதிகாரப் பகிர்வு அளிக்கும் வகையில் அமைச்சர்களின் பட்டியல் வியப்பளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர்கள் 7 பேருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கவனத்தை ஈர்த்த ‘மாற்றத்திற்கான அரசு’


"ஆட்சி அமைப்பது ஒரு கலை என்றால், தகுதியானவர்களைக் கொண்டு அமைச்சரவையை உருவாக்குவது ஒரு தவம். அந்த தவத்தில் விஜய் புதிய உத்திகளைக் கையாண்டுள்ளார்," என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் தவெக-வின் இந்த புதிய கூட்டணி அமைச்சரவை குறித்த விவாதங்கள் தீயாய் பரவி வருகின்றன. 


ஒருபுறம் மூத்த கட்சிகளின் பங்களிப்பு, மறுபுறம் தவெக-வின் புதிய ரத்தம் என இந்த அமைச்சரவை நிர்வாகத் திறமையிலும், முற்போக்குச் சிந்தனையிலும் ஒரு புதிய மைல்கல்லாக இருக்கும் என மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.


தமிழகத்தில் ஒரு நிலையான, ஊழலற்ற மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியை இந்த ‘விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு’ வழங்கும் என்ற நம்பிக்கையோடு, கோட்டையில் இன்று ஒரு புதிய அரசியல் சகாப்தம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.