தமிழகத்தில் ஜூன் 28 முதல் வெளுத்து வாங்கப்போகும் கனமழை

Su.tha Arivalagan
Jun 25, 2026,04:22 PM IST

சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் ஜூன் 28 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாநிலத்தின் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வளிமண்டல சுழற்சி மற்றும் பருவமழை தீவிரம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஜூன் 28 முதல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மேலும், வட தமிழக மாவட்டங்களான திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் ஜூன் 28 முதல் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.


மீனவர்களுக்கு எச்சரிக்கை :




தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், சூறாவளிக் காற்றும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய கடலோரப் பகுதிகளில் கடல் நீரோட்டம் மற்றும் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால், அப்பகுதி மக்களுக்கு சிறப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


கடந்த 24 மணி நேர மழை நிலவரம்:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் (வியாழக்கிழமை காலை 8:30 மணி வரையிலான நிலவரப்படி), சேலம் மாவட்டத்தின் தம்மம்பட்டியில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பெரம்பலூர் மாவட்டத்தின் வேப்பந்தட்டையில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.


சென்னை மற்றும் புறநகர் நிலவரம்:

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் ஓரளவு குறைந்து, நகரின் சில பகுதிகளில் குளிர்ந்த வானிலை நிலவக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மழைக்கால எச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும், நீர்நிலைகளுக்கு அருகில் செல்பவர்கள் கவனமுடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.