திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை
சென்னை: தமிழகத்தில் பெருகி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், போதைப்பொருள் புழக்கம் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (மார்ச் 17, 2026) நடைபெற்றது. சென்னையில் உள்ள கே.கே.நகரில் நடைபெற்ற முக்கிய ஆர்ப்பாட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின் பின்னணி :
தமிழக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து மாநிலத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கூட்டணி கட்சிகளான பாஜக மற்றும் பிற தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இதில் திரளாகக் கலந்து கொண்டனர். "விடியா அரசு" என்று திமுகவை விமர்சித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தமிழக மக்களின் நலன்களை அரசு புறக்கணிப்பதாக முழக்கமிட்டனர்.
எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை :
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார். அவர் பேசுகையில், தமிழகத்தில் இன்று சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பட்டப்பகலில் கொலைகள் நடப்பது வாடிக்கையாகி விட்டது. காவல்துறை சுதந்திரமாகச் செயல்பட திமுக அரசு முட்டுக்கட்டை போடுகிறது. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் தங்கு தடையின்றி நடக்கிறது. இதைத் தடுக்கத் தவறிய முதலமைச்சர், விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.மின் கட்டணம், சொத்து வரி உயர்வால் சாமானிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு மக்களைத் துன்புறுத்துவதே இந்த அரசின் சாதனையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது ஒற்றுமையை மீண்டும் நிலைநாட்டியுள்ளது. சென்னை மட்டுமல்லாது மதுரை, கோவை, திருச்சி, கடலூர் என மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இப்போராட்டம் எதிரொலித்தது. இந்த தேர்தலோடு திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தேர்தலுக்கு பிறகு அமைய போகும் அதிமுக அரசில் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்தார்.