அமைதியான புத்தாண்டுக் கொண்டாட்டம்.. தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு!

Su.tha Arivalagan
Dec 31, 2025,12:40 PM IST

- அ.கோகிலா தேவி


சென்னை: 2026 ஆம் ஆண்டை வரவேற்கத் தயாராகி வரும் வேளையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தமிழகக் காவல்துறை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பிரம்மாண்டமான பாதுகாப்பு அரணை உருவாக்கியுள்ளது. 


அசம்பாவிதங்கள் இல்லாத புத்தாண்டு என்பதை இலக்காகக் கொண்டு மாநிலம் முழுவதும் 1 லட்சம் போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர்


தலைநகர் சென்னையில் மட்டும் 19,000 போலீசார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் என ஒரு பெரும் படை பாதுகாப்புப் பணியில் இறக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு விபத்தும், அசம்பாவிதமும் நேர்ந்திடாத வகையில் காக்க போலீஸார் தீவிரமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




மெரினா, எலியட்ஸ், நீலாங்கரை போன்ற கடற்கரைப் பகுதிகளில் மக்கள் கடலில் இறங்குவதைத் தடுக்க மணல் பரப்பில் தற்காலிகக் காவல் உதவி மையங்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


நவீன தொழில்நுட்பம் மூலமாக டிரோன் (Drone) கேமராக்கள் மூலம் கூட்டத்தைக் கண்காணிப்பது ஆல் டெரைன் (ATV) வாகனங்கள் மூலம் மணல் பரப்பில் ரோந்து செல்வது எனத் தொழில்நுட்ப ரீதியாகவும் காவல்துறை பலப்படுத்தப்பட்டுள்ளது.


போக்குவரத்து மற்றும் கட்டுப்பாடுகள்


புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்றாலே பைக் ரேஸ் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் ஆகியவை பெரும் சவாலாக இருக்கும்.   சென்னையில் மட்டும் 425 இடங்களில் வாகனத் தணிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


கிண்டி, அடையாறு, ECR மற்றும் GST சாலைகளில் பைக் ரேஸைத் தடுக்க 30 சிறப்பு ரோந்து குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.


விபத்துகளைத் தவிர்க்க இன்று இரவு 10 மணி முதல் நகரின் அனைத்து முக்கிய மேம்பாலங்களும் போக்குவரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


(அ.கோகிலா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)