தமிழ்நாட்டில் இன்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் : 33 கேள்விகள் கேட்கப்படும்

Su.tha Arivalagan
Aug 01, 2026,10:37 AM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணிகள் இன்று (ஆகஸ்ட் 1, 2026) முதல் முறைப்படி தொடங்கியுள்ளன. வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இந்த கணக்கெடுப்புப் பணியில், அலுவலர்கள் நேரடியாக வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சேகரிக்க உள்ளனர்.


களத்தில் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் :

இம்மாபெரும் பணிக்காக தமிழ்நாடு முழுவதும் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் பணிகளை முறையாகக் கண்காணித்து வழிநடத்த 19,000 மேற்பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுப் பணியில் களமிறக்கப்பட்டுள்ளனர். கணக்கெடுப்புப் பணிகள் உடனுக்குடன் துல்லியமாகப் பதிவேற்றம் செய்யப்படுவதை இவர்கள் மேற்பார்வையிடுவார்கள்.


சேகரிக்கப்படும் 33 முக்கியத் தகவல்கள் :




மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, வீட்டின் நிலை மற்றும் அதில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இதற்காக மொத்தம் 33 கேள்விகள் கேட்கப்படும்.


முக்கியக் கேள்விகள் அடங்கிய விவரங்கள்:


வீட்டு விவரங்கள்: வீடுகளின் எண்ணிக்கை, வீட்டின் உரிமை நிலை மற்றும் கட்டமைப்புத் தன்மை.


அடிப்படை வசதிகள்: குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் மின்வசதி நிலை.


சமையல் எரிபொருள்: வீட்டில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு (LPG) அல்லது இதர எரிபொருள் பயன்பாடு.


டிஜிட்டல் சாதனங்கள்: இணையதள வசதி (Internet Access), கணினி/லேப்டாப் (Computer/Laptop), ஸ்மார்ட்போன் மற்றும் இதர டிஜிட்டல் சாதனங்கள் உள்ளனவா என்ற தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.


கணக்கெடுப்பாளர்கள் இதற்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேக கைப்பேசி செயலி (Mobile App) மூலமாக டிஜிட்டல் முறையில் தகவல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.


தகவல்கள் முற்றிலும் ரகசியம்: 


1948-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின்படி (Census Act, 1948), பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் அனைத்துத் தகவல்களும் மிகவும் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் வைக்கப்படும். எனவே, பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி, தங்கள் வீட்டிற்கு வரும் கணக்கெடுப்பாளர்களிடம் சரியான விவரங்களை வழங்கி, நாட்டின் இந்த முக்கியமான வளர்ச்சிப் பணிக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.