சுனாமி நினைவு தினம்.. கண்ணீர் சிந்தும் நாள் இல்லை.. விழித்துக் கொள்ளும் தினம்!

Su.tha Arivalagan
Dec 26, 2025,06:19 PM IST

- ந. லட்சுமி


மன்னார்குடி: பகாசுரன் போல் கண் இமைக்கும் நொடியில் கடற்கரையில் ஆடி பாடி மகிழ்ந்து கொண்டிருந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் கடற்கரையோரம் தனது பொழப்புக்கு வைத்திருந்த படகை சரிபார்த்துக் கொண்டு இருந்தவர்கள், மீன்பிடிக்க சென்று விட்டு  படகை கரைக்கு ஒதுக்கிய மீனவர்கள், ஆடி, பாடி  விளையாடிக் கொண்டிருந்த மழலையர்கள்  என்று ஏராளமான உயிர்கள், என்ன நடக்கிறது என்று கூட உணர அவகாசம் கிடைக்காமல், அலை என்கின்ற அரக்கன் எழுந்து, தன் நாக்கை சுழட்டி அவசரமாக பல்லாயிக்கணக்கான உயிர்களை ஈவு இரக்கமின்றி கடல் மாதாவின் மடியில் கொண்டு சேர்த்து விட்டது. 


நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவன் பாடினார். கடல் மாதாவைத் தாய் என்று அழைத்தார்கள்,   அவள் எப்படி இவ்வளவு உயிர்களை தன் உள் இழுத்துக் கொண்டாள் என்றே நினைத்துப் பார்க்க முடியவில்லை .


எஞ்சிய உயிர்கள் என்னவென்று கூட  உணரத் தெரியாமல் உயிரை விட்ட உறவுகளை எண்ணி அழுவதா, தன்னைச் சுற்றி இறந்த பிணங்களாக கிடக்கும் உயிர்களை நினைத்து அழுவதா, தன்னைச் சார்ந்த உயிர்கள், உறவுகள் இன்னும் எங்கே இருக்கிறார்கள் என்று தேடுவதா? அவர்களும் இருக்கிறார்களா இல்லையா? அவர்களைத் தேடுவதா? இல்லையா? அழக்கூட திராணியில்லாமல் செயலிழந்து போய் நின்றார்கள். 


சுயநினைவின்றி மனம் நலம் பேதலித்து நின்றவர்கள் பல பேர். அவயங்களை இழந்து தரையில் துடித்த உயிர்கள் ஏராளம். அவயங்கள் இழந்து குற்றுயிரும் குல உயிருமாய் தன்னை சுற்றி கிடைக்கும் உயிர்களை எழுந்து காப்பாற்றுவதா என்ன செய்வது என்ற ஒரு சிந்தனையே வர முடியாத அளவில் மக்கள் உருகுக்குலைந்து நின்றவர்கள் ஏராளம்.


எங்கு நோக்கிலும் மரண ஓலம்.




சாக்கடை நிறத்தில் குழம்பு போல் சூழ்ந்து நின்ற கருப்பு சேற்று குழம்பு. உயிரை அழித்த சுனாமி, என் நினைவுகளில் இன்றும் வலியாய்  நிறைந்து இருக்கிறது அழிப் பேரலை.


சுனாமி தினம் என்பது ஒரு சாதாரண நினைவு நாள் அல்ல. அது மனித மனதை உலுக்கும், இயற்கையின் பேராற்றலை அழித்த  பேரழிவின் நிஜத்தின் நினைவுகளை, நெஞ்சத்தில் நிழலாட வைத்துக் கொண்டிருக்கும் நினைவூட்டல் நாள்.


உயிர்களின் விலை என்ன என்பதை உலகிற்கு உணர்த்திய தினத்தின் ஒரு நிசப்தமான வலி. 


2004 டிசம்பர் 26 அன்று எழுந்த அந்த ஆழிப் பேரலை, கடலின் அமைதிக்குள் மறைந்திருந்த கொடூர முகத்தை மனிதகுலத்திற்கு வெளிப்படுத்தியது. அன்று சுனாமி ஒரு பேரழிவாக மட்டும் வரவில்லை, அது மனித வாழ்க்கையின் நிலையாமையை (நிலை மாறும் உலகு, நிலையில்லா உலகை) நிலையில்லாமையை உரத்த குரலில் சொல்ல வந்தது காலன்.


கடல் என்பது வாழ்வின் ஆதாரம். அதே கடல், சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான உயிர்களை விழுங்கிய போது, மனிதன் தன் அறிவின் எல்லையை உணர்ந்தான். வீடுகள், கனவுகள், குடும்பங்கள், எதிர்காலத் திட்டங்கள்  அனைத்தையும் ஒரே நொடியில் சுனாமி துடைத்தெறிந்து அழித்துவிட்டது. 


அழிவின் அந்தக் காட்சிகள் கண்களில் இருந்து மறையவில்லை. தாயை இழந்த குழந்தையின் அழுகுரல், துணையை இழந்த ஒருவரின் மனதில் நீங்காத வலியோடு மௌனப் போராட்டம், பெற்றோரை இழந்த பிள்ளைகளின் வெறுமை,  இவை அனைத்தும் இன்று வரை நம்மோடு, உணர்வோடு நகர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று வரை கண்ணீரோடு நடந்த நிகழ்வைப் பேசிக்கொண்டே இருக்கின்றோம்.


சுனாமி நமக்கு  நல்லதொரு பாடம் சொல்லாமல் போகவில்லை. மனிதன் என் மக்கள், என் மனுசாள், சாதி மதம் கருப்பு சேப்பு, என் வீடு, என் நாடு, என் உலகம் என்று அனைத்துமே தனது உடமை என்று அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கும் மனித பதர்களா, நீங்கள் யாரும் இயற்கையின் மேலாளர்கள் அல்ல, நீங்கள் அனைவரும் அதன் ஒரு சிறு அங்கம் மட்டுமே என்பதை அந்தப் பாடம் உணர்த்தியது. 


இயற்கையை மதிக்காமல், அதனை சுரண்டி, அதன் எச்சரிக்கைகளை புறக்கணிக்கும் போது, அதன் விளைவுகள் எவ்வளவு கொடூரமாக இருக்கும் என்பதை சுனாமி உலகிற்கு உணர்த்தியது. 


தொழில்நுட்ப முன்னேற்றம் இருந்தாலும், இயற்கையின் முன் மனிதன் இன்னும் சிறியவனே.


சுனாமி தினம், இறந்தவர்களை நினைத்து கண்ணீர் சிந்துவதற்கான நாளாக மட்டும் இருக்கக் கூடாது. அது விழிப்புணர்வின் நாள். 


பேரழிவுகளை எதிர்கொள்ளும் தற்காப்பை சொல்லும் நாள். முன் எச்சரிக்கை, இயற்கை பாதுகாப்பு அமைப்புகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு  இவற்றையெல்லாம் தாண்டி நேர்ந்த மிகப்பெரிய துயரான சம்பவம்.


மனிதாபிமானம், மனிதனை மனிதன் மதிக்க வேண்டும் என்று பாடம் புகட்டியது, தான் தனது என்று இல்லாமல், அறம், புறம் சுற்றி பார்.  உன் போன்றோரை, எளியோரை, உன்னால் முடிந்த அளவு காத்துக்கொள். உதவி செய் என்று கூறிய முக்கியமான நாள்.  இவையனைத்தையும் மீண்டும் மீண்டும் வாழ்நாள் முழுவதும் சிந்திக்க வைக்கும் நாள். 


உயிரிழந்தவர்களின் நினைவு, உயிருடன் இருப்பவர்களுக்கு பொறுப்பை நினைவூட்ட வேண்டும்.


உயிரை அழித்த சுனாமி


ஒவ்வொரு நாளுமே இயற்கை சீர்கேடுகள் நம்மை சூழ்ந்து உள்ளன. சுனாமி போன்றே  புயலாய், மழையாய் சூறாவளியாய், திடீர் பேய் மழையாய் மேக வெடிப்புகள் இப்படி பல வழிகளில் நம்மை மீண்டும் மீண்டும் அழைக்கிறது.  இவை நம்மை பயமுறுத்துவதற்கு அல்ல, விழித்திருக்கச் சொல்ல. 


இயற்கையோடு ஒற்றுமையாக வாழ, ஒருவருக்கொருவர் துணையாக நிற்க, மனிதநேயத்தை இழக்காமல் முன்னேற "சுனாமிப் பேரழிவால்,  பேரறிவாய்" பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். அந்தப் பேரலை அழித்தது பல உயிர்களை, ஆனால் அது விட்டுச் சென்ற நினைவுகள், நம்மை இன்னும் மனிதர்களாக வாழ அறைகூவல் இன்று சுனாமி பேசவில்லை.


அது அலையாக எழவில்லை.

கடலைக் கொந்தளிக்கவில்லை.

ஆனால் அது நம் மனங்களில் இன்னும் மௌனமாகக் கத்திக்கொண்டிருக்கிறது.


நீங்கள் என்னை மறந்துவிட்டீர்களா? என்று கேட்பது போல, கடற்கரையின் மணலில் இன்னும் அந்த நாள் தடயங்கள் புதைந்து கிடக்கின்றன. பெயர் தெரியாத பல உயிர்கள், கல்லறை கூட இல்லாமல், கடலின் மடியில் உறங்கிக் கொண்டிருக்கின்றன.


ஒரு நிமிடத்திற்கு முன் சிரித்த முகங்கள்,

அடுத்த நிமிடத்தில் நினைவுகளாக மாறிய காட்சிகள்,

இவை விபத்து அல்ல,

இவை இயற்கை மனிதனிடம் கேட்ட கேள்விகள்.


அன்று கடல் கோபப்படவில்லை,

எச்சரித்தது.

மனிதனின் பேராசை, அலட்சியம்,

இயற்கையை “வளமாக” மட்டுமே பார்த்த பார்வை,

அதற்கெதிரான ஒரு உரத்த பதில்தான் அந்த பேரலை.


சுனாமி நமக்குக் கற்றுக்கொடுத்தது பயத்தை அல்ல,

பொறுப்பை,

ஒற்றுமையை,

மனிதநேயத்தை.


அன்று உயிர் தப்பியவர்கள்

“நாம் வாழ்வது ஏன்?”

என்று கேட்டார்கள்.

அந்தக் கேள்விக்கான பதில்தான்

இன்றைய சுனாமி தினம் நிகழ்வு.


"விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்"


சமுதாயத்தில் எதுவும் நிலை இல்லை, நீ வாழும் இந்த நிமிடமே நிஜம், உனக்கு கிடைத்த அவகாசத்தை பயனுள்ளதாக, பலருக்கும் பயனுள்ளதாக கழி.


இயற்கையுடன் எப்போதும் ஓர் எச்சரிக்கையுடன் இரு உன்னையும் காத்து சமுதாயத்தையும் பாதுகாத்துக் கொள்.


இன்று சுனாமி தினம் எல்லாம் நினைவு தினமாக, நினைவு கூரவில்லை என்றால், மனதில் எச்சரிக்கை உணர்வே இருக்காது. நாலாவட்டத்தில் இழப்புகள் எல்லாம் மறந்து போய்விடும்.


இன்று நாம் விழிக்கவில்லை என்றால்,

நாளை வரலாறு மீண்டும் ரத்தத்தில் எழுதப்படும்.


ஆகையால்,

சுனாமி தினம் என்பது

கண்ணீர் மட்டும் சிந்தும் நாள் அல்ல.

இது ஒரு உறுதிமொழி.


இயற்கையை மதிப்போம்.

உயிர்களின் மதிப்பை உணர்வோம்.

அழிவுக்குப் பிறகு அல்ல,

அழிவுக்கு முன்பே மனிதர்களாக வாழ்வோம்.


சுனாமிப் பேரலை ஆயிரக்கணக்கான உயிர்களை கடலுக்குள் அழைத்துச் சென்றது. பிழைத்து உயிர்த்து இருக்கும் நாம், சுனாமி தினமான இன்று, அந்த  நினைவுகள் நம்மை மனிதத்துவம் நோக்கி அழைக்கிறது ஓர் உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.


பிறந்தோம், வாழ்ந்தோம், செத்து மடிந்தோம் என்று இல்லாமல் உலகுக்கு ஏதாவது சாதித்து, நம் தடயங்களை, நம் வழி தோன்றல்களுக்கு விட்டுச் செல்வோம்.