பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி

Su.tha Arivalagan
Jul 29, 2026,01:52 PM IST

சென்னை: பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு வாரம் ஒரு நாள் ‘சிக்கன் பிரியாணி’ வழங்க வேண்டும் என முதலமைச்சர் விஜயிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


சத்துணவு திட்டத்தில் புதிய பரிமாணம் :




தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தவும், அவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும் சத்துணவுத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு தினமும் தரமான மதிய உணவுடன், வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் அவித்த முட்டைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாணவர்களின் உணவுப் பட்டியலில் மேலும் ஒரு சுவையான மற்றும் சத்தான மாற்றத்தைக் கொண்டு வரும் நோக்கில், புதிய பரிந்துரை ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முன் வைத்துள்ளார்.


அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி :

இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், "பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணாக்கருக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்துள்ளேன். சத்துணவோடு மாணாக்கருக்கு முட்டை வழங்குவது போல், வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என முதலமைச்சர் விஜயிடம் பரிந்துரைத்துள்ளேன்." என கூறி உள்ளார். மாணவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், அவர்கள் விருப்பத்துடன் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மாணவர்கள் மற்றும் பெற்றோர் வரவேற்பு :

பொதுவாகக் குழந்தைகளுக்கு பிரியாணி போன்ற உணவுகள் மீது தனி ஈர்ப்பு உண்டு. அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குப் புரதச்சத்து நிறைந்த உணவாக இது அமையும். சத்துணவில் முட்டை வழங்கப்பட்டு வரும் நிலையில், வாரத்தில் ஒரு நாள் சிக்கன் பிரியாணி சேர்க்கப்பட்டால் அது மாணவர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்களும் ஆசிரியர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


முதலமைச்சர் விஜய்யின் ஒப்புதலுக்குப் பிறகு, இத்திட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும், அதைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.