அதிரடி காட்டும் தங்கம் விலை...அதிர்ச்சியில் மக்கள்...ஒரே நாளில் ரூ.1280 உயர்வு

Su.tha Arivalagan
Jan 05, 2026,04:47 PM IST

சென்னை: புத்தாண்டின் தொடக்கத்தில் சற்று குறைந்திருந்த தங்கத்தின் விலை, தற்போது மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 1,920 வரை உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் இருமுறை உயர்ந்து ரூ.1280 உயர்ந்துள்ளது.


இன்றைய விலை நிலவரம் (ஜனவரி 5, 2026):




சென்னையில் இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில், ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 12,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 640 அதிகரித்து, வரலாறு காணாத வகையில் ரூ. 1,01,440-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் தூய தங்கத்தின் (24 கேரட்) விலை கிராமுக்கு ரூ. 87 உயர்ந்து ரூ. 13,833-ஆகவும், ஒரு சவரன் ரூ. 1,10,664-ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 8 அதிகரித்து ரூ. 265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


காலையில் ரூ.640 உயர்ந்த தங்கம் விலை, மாலையில் மீண்டும் ரூ.640 உயர்ந்தது. ஒரே நாளில் இருமுறை உயர்ந்து இன்று மட்டும் ரூ.1280 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.160 உயர்ந்து ரூ.12,760 க்கும், ஒரு சவரன் ரூ.1,02,080 க்கும் விற்பனையாகிறது.ஒரே நாளில் இந்த அளவிற்கு அதிரடியாக உயர்ந்துள்ள தங்கம் விலை வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


விலை உயர்வுக்கான காரணங்கள்:


சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்களே இந்த திடீர் உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையேயான மோதல் போக்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக, பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் உள்நாட்டு தங்க விலையை நேரடியாகப் பாதிக்கின்றன. 


அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை இருப்பு வைப்பதும் விலையேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழலால் தங்கத்தின் விலை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக 2026-ஆம் ஆண்டில் தங்கம் ஒரு புதிய முதலீட்டு சாதனையாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


புத்தாண்டு சலுகைகள் மற்றும் திருமண சீசன் நெருங்கி வரும் வேளையில், இந்த அதிரடி விலை உயர்வு நகை வாங்குவோரைத் திகைக்க வைத்துள்ளது. இருப்பினும், நீண்ட கால அடிப்படையில் தங்கம் ஒரு சிறந்த முதலீடு என்பதால், டிஜிட்டல் தங்கம் மற்றும் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.