தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டியில்லை...வேல்முருகன் அதிரடி அறிவிப்பு

Su.tha Arivalagan
Mar 25, 2026,12:23 PM IST

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த சில நாட்களிலேயே தேர்தலில் போட்டியில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.


தமிழக வாழ்வுரிமை கட்சி 2019 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. தற்போத 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஏறக்குறைய தொகுதி பங்கீட்டு பணிகள் நிறைவடைந்து விட்டன. சிபிஎம் மற்றும் சிறிய கட்சிகள் சிலவற்றுடன் இன்று மாலை தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை துவங்கியதுமே திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்.


கூட்டணியில் இருந்து ஏன் விலகுகிறீர்கள் என வேல்முருகனிடம் கேட்ட போது, நாங்கள் 5 சீட்கள் கேட்டோம். ஆனால் அவர்கள் 1 சீட் மட்டுமே தருவதாக சொன்னார்கள். சீட் கூட பிரச்சனை இல்லை. ஆனால் நாங்கள் முன் வைத்த 10 அம்ச கோரிக்கைகளை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை என்பது உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் அடங்கிய 10 அம்ச கோரிக்கைகளை தான் நாங்கள் முன் வைத்தோம். ஆனால், பெரிய கட்சிகளே கோரிக்களை ஏதும் இல்லாமல் கூட்டணியில் இணையும் போது, உங்களுக்கு என்ன என்ற தோணியில் நடத்துகிறார்கள்.




முதல்வரை செயல்படவிடாமல் அதிகாரிகள் சிலர் தடுக்கிறார்கள். இது பற்றி சட்டசபையில் பேசுவது அவர்களுக்கு இடையூறாக உள்ளது. அவர்களின் தலையீடு அரசியல் கூட்டணி வரை நீண்டுள்ளது. அடிப்பணிந்து இருப்பதை விட வெளியேறுவது மேல் என்பதால், கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்தோம் என தெரிவித்தார். 


திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சி என்டிஏ கூட்டணி அல்லது தவெக பக்கம் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மதவாத கட்சியான பாஜக இருக்கும் கூட்டணியில் தாங்கள் ஒரு போதும் இணைய மாட்டோம் என கூறி விட்டார் வேல்முருகன். இதனால் தனித்து போட்டியிடுவாரா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் இன்று, தமிழக வாழ்வுரிமை கட்சி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடாது என அதிரடியாக அறிவித்துள்ளார். ஏற்கனவே திமுக கூட்டணியில் இருக்கும் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி நேற்று தான் தேர்தலில் பங்கேற்காது. ஆனால் திமுக.,விற்கு ஆதரவு தருவோம் என அறிவித்தார். கமலை தொடர்ந்து தற்போது வேல்முருகனும் தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடாது என அறிவித்துள்ளார்.