தமிழக சட்டசபையில் அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதம் - செங்கோட்டையன் கருத்துக்கு ஈபிஎஸ் எதிர்ப்பு!

Su.tha Arivalagan
Aug 25, 2026,12:24 PM IST

சென்னை : தமிழக சட்டசபையில் இன்று (25.08.2026) கடும் அமளி மற்றும் பரபரப்பான சூழல் நிலவியது. குறிப்பாக, அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட உள் விவகார வாக்குவாதம் மற்றும் சபாநாயகரை நோக்கி எடப்பாடி பழனிசாமி ஆக்ரோஷமாகப் பேசியது போன்றவை அவையை பரபரப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்றன.


அதிமுக எம்எல்ஏ.,க்கள் 6 பேர் ராஜினாமா குறித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என தெரிவித்தார். இதனால் அவையில் கடும் விவாதம் ஏற்பட்டது. அதிமுக எல்.எல்.ஏ-க்கள் சிலர் அவைக்குள் நடந்து கொண்ட விதம் குறித்து ஆரம்பத்தில் சபை முன்னவரும் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் பேசினார். அவர், "6 சட்டமன்ற தொகுதிகளில் விரைவாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் ஆர்வம்; அதில் மாற்று கருத்து கிடையாது; அதில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்பதிலும் மாற்று கருத்து கிடையாது" என்று கூறினார்.




அவரது இந்தப் பேச்சு, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் பிற அதிமுக உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. செங்கோட்டையனின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மற்ற அதிமுக உறுப்பினர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில், சபாநாயகர் இருக்கையை நோக்கி எடப்பாடி பழனிசாமி மிக ஆக்ரோஷமாகவும் ஆவேசமாகவும் பேசத் தொடங்கினார்.


சபாநாயகரிடம் தனது தரப்பு நியாயத்தைக் கூற முற்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு, பேச போதிய அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அவரது மைக் ஆஃப் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மேலும் கோபமடைந்த அவர், சபாநாயகரை நோக்கி, "பேச அனுமதிக்கவில்லை என்றால் நிற்கத்தான் செய்வோம்" என்று ஆவேசமாகக் கத்தினார். அவரது இந்தப் பேச்சு அவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பதிலுக்கு சபாநாயகரும், "உட்காருங்கள். இங்கு சட்டசபை நடத்துகிறோமா அல்லது பொதுக்கூட்டம் நடத்துகிறோமா?" என்றார்.


ஈபிஎஸ் கர்ஜித்த போது சிவிஎஸ் வேடிக்கை :


இந்த பரபரப்பான வாக்குவாதங்கள் மற்றும் அமளிகளுக்கு இடையே, பின்னிருக்கையில் அமர்ந்திருந்த அதிமுக மூத்த தலைவர் சி.வி. சண்முகம், எடப்பாடி பழனிசாமி ஆக்ரோஷமாகப் பேசுவதைச் சிரித்தபடியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சட்டசபையில் இன்று நடந்த இந்த நிகழ்வுகள், அதிமுகவின் உட்கட்சிப் பூசலை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ஒருபுறம் மூத்த தலைவர்கள் இடையேயான கருத்து வேறுபாடு, மறுபுறம் சபாநாயகருடனான மோதல் என அதிமுகவுக்குள் குழப்பமான சூழல் நிலவுவது போல் தெரிகிறது. இதனால் அவையின் நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.