பக்குவம் இல்லாதவரை மக்கள் எப்படி ஏற்பார்கள்? : விஜய் குறித்து அண்ணாமலை கேள்வி!
சென்னை: விஜய் முதல்வரை Uncle என்று அழைக்கிறார். திமுக அமைச்சர் ஒருவர், விஜய்யை Boomer என்று கூறினால் எப்படி இருக்கும்? பக்குவம் இல்லாதவரை மக்கள் எப்படி முதல்வராக ஏற்பார்கள்? என்று தெரிவித்துள்ளார்.
மதுரையில் நேற்று விஜய் கட்சியின் மாநாடு நேற்று பிரம்மாண்ட அளவில் நடைபெற்றது. இந்த மாநாடு குறித்து பாஜக முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை பேசுகையில், விஜய் கட்சி தொடங்கியபோது ஆரோக்கியமான அரசியல் தான் செய்வேன். யாரையும் விமர்சிக்க மாட்டேன் என்று கூறினார். இப்போது முதல்வரை Uncle என்று அழைக்கிறார். திமுக அமைச்சர் ஒருவர், விஜய்யை Boomer என்று கூறினால் எப்படி இருக்கும்? பக்குவம் இல்லாதவரை மக்கள் எப்படி முதல்வராக ஏற்பார்கள்?
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தலைவர்கள் ஒற்றுமையுடன் உள்ளனர். கட்சியில் புதியவர்கள் இணைந்து கொண்டுள்ளனர். 2026- இல் நிச்சயம் மாற்றம் வரும். விஜய் தன் மீது நம்பிக்கை வைத்து பேசினால் தான் அவரை தேடி மற்ற கட்சித் தலைவர்கள் வருவார்கள். விஜய் மற்ற கட்சியின் பலம், பலவீனத்தை கூறினாரே தவிர அவருடைய பலத்தை பற்றி தெரிவிக்கவில்லை.
விஜய் ஒரு படத்தில் மீனவராக நடித்துள்ளார். அப்போதெல்லாம் கச்சத்தீவு குறித்து பேசினாரா? கச்சத்தீவு விவகாரம் இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம்.கச்சத்தீவு வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. அரசியல் கட்சி தொடங்கியதற்கு முன்பு ஒரு மாதிரி, பின்பு ஒரு மாதிரி விஜய் பேசுகிறார். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட எத்தனை இந்திய மீனவர்கள் மீட்கப்பட்டார்கள் என்பது விஜய்க்கு தெரியுமா?
சென்ற 11 ஆண்டுகளில் வேறு எந்த மாநிலத்துக்கும் கொடுக்கப்படாத நிதி தமிழகத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த குடியரசு துணை தலைவர் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். விஜய் எந்த குற்றச்சாட்டை முன்வைத்தாலும் தரவுகளின் அடிப்படையில் வைக்க வேண்டும். பழங்கதைகளை பேசாமல், 21ம் நூற்றாண்டு அரசியலுக்கு விஜய் வர வேண்டும்.
எல்லோருக்கும் விஜய் தாய்மாமா என்றால், 50 ஆண்டுகளாக எங்கே சென்றார்? எத்தனை சகோதரிகளுக்கு சீர் கொடுத்தார்? தாய்மாமா, தான் நடித்த படங்களுக்கு இலவசமாக டிக்கெட் கொடுக்கிறாரா?
2014, 2019, 2024 - இல் பாசிச கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. வெற்றி பெற முடியாத மாநிலங்களில் கூட பாஜக வெற்றியை பதிவு செய்து வருகிறது. பொதுமக்கள் பாஜகவை சக்தி வாய்ந்த கட்சியாக பார்த்து வருகின்றனர். தமிழகத்தில் 18 சதவீதம் பேர் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். விஜய்யும், நாங்களும் சித்தாந்தத்தில் நேர் எதிராக உள்ளோம். விஜய் பழைய பஞ்சாங்கத்தையே பேசி வருகிறார். மற்றவர்களின் பலவீனம் குறித்து பேசிய விஜய் தன்னுடைய பலத்தை பற்றி பேசவில்லை. விஜய் தனது ரசிகர்களின் பட்டாளத்தை வாக்குகளால் மாற்ற வேண்டும் என்றால் பலமான சித்தாந்தம் வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும் என்று விமர்சித்துள்ளார்.