தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை : எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்து உள்ள நிலையில் டிசம்பர் 19ம் தேதியான இன்று தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2026 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழக சட்டசபை தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிறப்பு வாக்காளர் வரைவு திருத்தப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த போதும் தொடர்ந்து எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வந்தது.
இதன் விளைவாக பல மாவட்டங்களில் லட்சக்கணக்கான போலி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை நடைபெற்ற எஸ்ஐஆர் பணிகளில் தமிழகம் முழுவதும் எவ்வளவு போலி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது என்பது குறித்த அதிகாரப்பூர்வ புள்ளி விபத்தை தேர்தல் கமிஷன் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் வரைவு வாக்காளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க, சேர்க்க, திருத்தங்கள் செய்ய விண்ணப்பிக்கலாம். பொது மக்கள் விண்ணப்பங்களை அளித்த பிறகு, அதனை ஆய்வு செய்து இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்றும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.