இனி லஞ்சம் கொடுக்காதீங்க; புகார் கொடுங்க: வாட்ஸ்ஆப் மொபைல் எண்கள் வெளியீடு
சென்னை: தமிழக அரசு அலுவலகங்களில் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யவும், ஊழலை முற்றிலுமாக ஒழிக்கவும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் ஏதேனும் ஒரு பணிக்காக அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் அதுகுறித்து உடனடியாகப் புகார் அளிப்பதற்காகப் புதிய வாட்ஸ்ஆப் எண் மற்றும் பல்வேறு தொடர்பு வழிமுறைகளைத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களின் புகார்களை எளிமையாகவும் விரைவாகவும் தெரிவிக்கும் வகையில், 9498180936 என்ற பிரத்யேக வாட்ஸ்ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணைப் பயன்படுத்தி லஞ்சம் தொடர்பான புகார்களை ஆதாரங்களுடன் அனுப்பினால், அதன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உடனடியாகத் தீவிர நடவடிக்கை எடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வாட்ஸ்ஆப் மட்டுமின்றி, கீழ்க்கண்ட பல்வேறு ஊடகங்கள் வாயிலாகவும் தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம் எனத் துறைச் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் (Email): பொதுமக்கள் தங்களின் லஞ்சப் புகார்களை dvac@nic.in என்ற அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.
தொலைபேசி எண்கள் (Telephone): தொலைபேசி வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்யப் பின்வரும் எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன:
044 - 22321085
044 - 22310989
044 - 22342142
044 - 22321090
நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ புகார் அளிக்க:
பொதுமக்கள் தங்களது புகார்களைக் கடிதம் மூலமாகவோ அல்லது நேராகச் சென்றோ வழங்க விரும்பினால், பின்வரும் தலைமை அலுவலக முகவரியைப் பயன்படுத்தலாம்:
இயக்குநர், லஞ்ச ஒழிப்புத்துறை,
எண். 293, MKN சாலை,
ஆலந்தூர், சென்னை - 600016.
பொதுமக்களுக்கான சேவைகளைப் பெறுவது அவர்களின் உரிமை என்றும், அதற்கு எவ்வித லஞ்சமும் தர வேண்டிய அவசியமில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லஞ்சப் புகார்களைத் துணிச்சலாக முன்வந்து அளிப்பதன் மூலமே அரசுத் துறைகளில் தூய்மையான நிர்வாகத்தைக் கொண்டு வர முடியும் என்பதால், இந்தத் தொடர்பு எண்களைப் பொதுமக்கள் பரவலாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இனி அரசு அலுவலகங்களில் உங்களை யாராவது லஞ்சம் கேட்டு அலைக்கழித்தால், சற்றும் யோசிக்காமல் மேலே உள்ள எண்களைத் தொடர்பு கொண்டு புகார் அழியுங்கள்!