பிப்ரவரி 17-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

Su.tha Arivalagan
Feb 07, 2026,12:56 PM IST

நெல்லை : தமிழக சட்டமன்றத்தில் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி 2026-2027 ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகச் சபாநாயகர் மு.அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 


தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பிப்ரவரி 17 அன்று சட்டமன்றத்தில் இந்த இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளார். பொதுவாகத் தேர்தல் நடைபெறும் ஆண்டுகளில் அல்லது முக்கியமான நிர்வாக மாற்றங்களின் போது முழுமையான பட்ஜெட்டிற்குப் பதிலாக 'வாக்குகளுக்கான முன்வரைவு' (Vote on Account) என்ற அடிப்படையில் இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.


சபாநாயகர் அப்பாவு நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டமன்ற பேரவை கூட்டத்துடன் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி காலை 9:30 மணிக்கு கூடுகிறது என்றும், அன்றைய தினம் 2026-27 இடைக்கால நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் வாசிப்பார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், பிப் 20 ம் தேதி 2026-27 க்கான முன் பண மாணிய கோரிக்கை 2025-26 க்கான கூடுதல் செலவுக்கான மாணிய கோரிக்கை அளிக்கப்படும் எனவும், அலுவல் ஆய்வுக்குழு கூடி கூட்டத்தொடர் எத்தனை நாள் நடத்தபடும் என்பதை அறிவிக்கப்படும் என்று பேசினார்.




கவர்னர் உரையுடன் இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது தமிழக கவர்னர் கே.என்.ரவி, கவர்னர் உரையை புறக்கணித்து, பாதியிலேயே வெளியேறினார். இது தொடர்பாக கவர்னர் மாளிகை, தமிழக அரசு மீது அதிருப்தியும் வெளியிட்டிருந்தது. இந்த விவகாரம் மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், தற்போதுள்ள பரபரப்பான அரசியல் சூழலில் பிப்ரவரி 17ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 


இது தற்போதைய திமுக அரசின் கடைசி பட்ஜெட் என்பதாலும், தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் என்பதாலும் மக்களை கவரும் வகையிலான முக்கிய அறிவிப்புக்கள் பலவும் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.