அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்...முதல்வர் அறிவிப்பு

Su.tha Arivalagan
Jan 03, 2026,09:04 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட காலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (CPS) ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 6-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO) அமைப்பு திட்டமிட்டிருந்தது. இந்தப் போராட்டத்தைத் தவிர்க்க, அமைச்சர்கள் ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அடங்கிய குழுவினருடன் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நான்கு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.


இந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவில், ஜனவரி 3-ம் தேதி (இன்று) முதலமைச்சர் ஒரு "நல்ல செய்தியை" அறிவிப்பார் என்று அமைச்சர்கள் உறுதியளித்துள்ளதாக ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் கே.வெங்கடேசன் தெரிவித்திருந்தார். பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டால், தற்போது பணியில் இருக்கும் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற சுமார் 48,000 ஊழியர்களும் பயனடைவார்கள்.




அரசு அமைத்த மூவர் குழு, பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS), பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) மற்றும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஆகியவற்றை ஆய்வு செய்து, தனது அறிக்கையை டிசம்பர் 30-ம் தேதி அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு வாக்குறுதி அளித்தபடி ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 


ஜனவரி 6 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ-ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு அனைவரின் போக்கையும் மாற்றி அமைத்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளதால் 20 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


TAPS (Tamil Nadu Assured Pension Scheme) - உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:


- மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடைசியாகப் பெற்ற மாத ஊதியத்தின் 50 சதவீதம் அவர்களுக்கு ஓய்வூதியமாக அளிக்கப்படும்


-  மாநில அரசு அலுவலர்களின் 10 சதவீத ஊதியப் பங்களிப்போடு இந்த உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்கப்படும்.


- ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும்.


- உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு  2 முறை அகவிலைப்படி உயர்வும் அளிக்கப்படும்.


- ஓய்வூதியதாரர் இறக்கநேரிடும்போது அவரது வாரிசுதாரருக்கு அவரது ஓய்வூதியத்திலிருந்து 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக அளிக்கப்படும்.


- உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச கருணை ஓய்வூதியம் அளிக்கப்படும்.


- ஓய்வ பெறும்போது அல்லது பணிக்காலத்தில் மரணமடையும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பணிக்கொடையானது அதிகபட்சம் ரூ. 25 லட்சமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படும்.