பொங்கல் பண்டிகை...சிறப்புப் பேருந்துகளில் இதுவரை 6.05 லட்சம் பேர் பயணம்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில், ஜனவரி 9 முதல் ஜனவரி 13 வரையிலான ஐந்து நாட்களில் மட்டும் மொத்தம் 6,05,850 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.
போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், ஜனவரி 13 அன்று கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் சிறப்புப் பேருந்துகளின் இயக்கத்தை ஆய்வு செய்தார். 2026 பொங்கல் பண்டிகைக்காக, சென்னையில் உள்ள கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய மூன்று முக்கிய பேருந்து முனையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஜனவரி 9 முதல் ஜனவரி 14 வரை, சென்னையில் இருந்து மட்டும் 2,092 தினசரி பேருந்துகளுடன் 10,245 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 22,797 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தவிர, பிற ஊர்களில் இருந்து 11,290 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 34,087 பேருந்து சேவைகள் வழங்கப்படுகின்றன.
ஜனவரி 13 இரவு 8 மணி நிலவரப்படி, சென்னையில் இருந்து 1,696 தினசரி பேருந்துகளும், 1,062 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. அன்று ஒரே நாளில் மட்டும் 1,17,070 பயணிகள் பயணித்துள்ளனர். ஜனவரி 9 முதல் 13 வரை இயக்கப்பட்ட மொத்தம் 14,130 பேருந்துகள் மூலம் 6,05,850 பயணிகள் தங்கள் ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.
பொங்கல் பண்டிகை முடிந்து பயணிகள் மீண்டும் சென்னை திரும்புவதற்காக, ஜனவரி 16 முதல் ஜனவரி 19 வரை 25,008 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில் 6,820 சிறப்புப் பேருந்துகள் மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்படும் 9,820 பேருந்துகளும் அடங்கும். இந்த ஆண்டு அரசுப் பேருந்துகளில் 4,27,132 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 4,76,358 ஆக இருந்தது.
அரசுப் பேருந்துகள் தொடர்பான தகவல்கள் அல்லது புகார்களுக்கு பயணிகள் 9445614436 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் அளிக்க 1800 425 6151 (கட்டணமில்லா எண்) அல்லது 9445117974 என்ற எண்ணை அழைக்கலாம்.
பொதுமக்களின் வசதிக்காக, கோயம்பேடு முனையத்தில் இருந்து மற்ற இரண்டு முனையங்களுக்கு இணைப்புப் பேருந்துகளை (MTC) மாநகர போக்குவரத்து கழகம் 24 மணி நேரமும் இயக்கி வருகிறது.