தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு

Su.tha Arivalagan
Jul 17, 2026,10:06 AM IST

சென்னை:தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்க உள்ளன. இந்த கணக்கெடுப்பு பணிகள் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்குத் தீவிரமாக நடைபெறவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுவதற்கும், அரசின் நலத்திட்டங்கள் தகுதியான மக்களைச் சென்றடைவதற்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு மிக முக்கியமான ஒரு அங்கமாக விளங்குகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டிற்கான இந்த பணிகளைத் துரிதப்படுத்த அரசு பல்வேறு விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.


ஆன்லைன் மூலம் விபரங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு:




பொதுமக்களின் வசதிக்காகவும், கணக்கெடுப்பு பணிகளை எளிமையாக்கும் பொருட்டும் இம்முறை டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. அதன்படி, பொதுமக்கள் தங்களது விபரங்களை நேரடியாக ஆன்லைன் வாயிலாகவே சமர்ப்பிப்பதற்கான சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் (அதாவது ஜூலை 17 முதல்) ஜூலை 31-ஆம் தேதி வரை பொதுமக்கள் இந்த ஆன்லைன் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுமக்கள் தங்களது குடும்ப விபரங்கள் மற்றும் தனிநபர் தகவல்களைச் சமர்ப்பிக்க https://se.census.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


தமிழக மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, தங்களது விபரங்களை அரசு அறிவித்துள்ள இணையதளத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் சமர்ப்பித்து, நாட்டின் மிக முக்கிய பணியான மக்கள்தொகை கணக்கெடுப்பிற்குத் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதல் கட்டமாக வீடுகள், வீட்டில் உள்ள வசதிகள் குறித்த கணக்கெடுப்புக்கள் நடத்தப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.