தமிழகப் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு: சிறப்பு வகுப்புகளுக்கு தடை

Su.tha Arivalagan
Sep 24, 2026,12:52 PM IST

சென்னை:தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வி ஆண்டிற்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை தேதிகளைப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் படி, வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை பள்ளிகளுக்குக் காலாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.  


செப்டம்பர் 26 முதல் விடுமுறை தொடக்கம் :

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் காலாண்டு தேர்வுகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. தேர்வு முடிவடைவதைத் தொடர்ந்து, மாணவர்களின் கற்றல் சுமையைக் குறைக்கவும் அவர்களுக்குப் போதிய ஓய்வு அளிக்கவும் செப்டம்பர் 26 முதல் விடுமுறை தொடங்குகிறது. விடுமுறைக்குப் பிறகு, அக்டோபர் 5-ஆம் தேதி (திங்கள்கிழமை) அன்று பள்ளிகள் மீண்டும் முறைப்படி இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சிறப்பு வகுப்புகளுக்குத் தடை: 




இந்த விடுமுறை காலத்தில், சில தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வைக் காரணம் காட்டி சிறப்பு வகுப்புகளை (Special Classes) நடத்துவது வழக்கமாக உள்ளது. ஆனால், இம்முறை விடுமுறை நாட்களில் எக்காரணத்தைக் கொண்டும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனப் பள்ளிக் கல்வித்துறை கடுமையான தடையை விதித்துள்ளது.விடுமுறை என்பது மாணவர்கள் மன அழுத்தமின்றி ஓய்வெடுக்கவும், தங்களின் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளவும் ஒதுக்கப்பட்ட நேரமாகும். எனவே, விடுமுறை நாட்களை முழுமையாக மாணவர்கள் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் எனப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


விதியை மீறினால் கடும் நடவடிக்கை :

பள்ளிக் கல்வித்துறையின் இந்த உத்தரவை மீறி, விடுமுறை நாட்களில் மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகளோ அல்லது திருப்புதல் தேர்வுகளோ நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வித்துறை எச்சரித்துள்ளது. பெற்றோர் மற்றும் மாணவர்கள் இதுகுறித்துப் புகார்களைத் தெரிவிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் விடுமுறையைக் கொண்டாடவும், அடுத்த பருவத்திற்கான தேர்வுகளுக்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளவும் உற்சாகமாகத் தயாராகி வருகின்றனர்.