வேலூரில் இன்றும் வெப்பநிலை அதிகமாக இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன்!

Manjula Devi
May 02, 2025,10:20 AM IST

சென்னை: வேலூரில் தொடர்ந்து இன்றும்  வெப்பநிலை அதிகமாக இருக்கும். ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வேலூர், கரூர், ஈரோடு, திருச்சி, மதுரை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெயில் சதத்தை  தாண்டி கொளுத்துகிறது. ஆனால் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.


இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வெயிலும், ஒரு சில இடங்களில் மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.இது குறித்த அறிவிப்பில் அவர் கூறியதாவது, 




01.05.2025 அன்று மாலை 5.30 மணி நிலவரப்படி,வேலூர் மாவட்டம் அதிகபட்ச வெப்ப நிலையில் முன்னிலை வகித்தது. தமிழ்நாட்டில் 3 இடங்களில் மட்டுமே 38 டிகிரி செல்சியஸ் ஐ தாண்டி வெயில் பதிவானது. அதன்படி, வேலூரில் 39.6,திருத்தணியில் 39.0, கரூரில்  38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.


கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை மெதுவாக அதிகரித்து, நாகை, கடலூர் பகுதிகளில் 37 புள்ளியைக் கடக்கின்றன. மேற்கு காற்று வலுவடைந்து, மேற்கு காற்று வடமேற்கு பருவமழை நெருங்கும்போது, ​​உட்புறங்களில் உள்ள வெப்பம் கடலோர பகுதிகளுக்குச் சென்று அவை உட்புறங்களை விட வெப்பமாக இருக்கும். இது மே மாதத்தில் மிகவும் நல்லது.


இன்றும் அதிகபட்ச வெப்ப நிலையில் வேலூர் மாவட்டம் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும். 


இன்று மழை:


தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.


கன்னியாகுமரி, நீலகிரி, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட கேரள மாவட்டங்களில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. 


சென்னை வெப்பநிலை:

இன்று சென்னையில் 37 டிகிரி செல்சியஸை தாண்டி வெயில் கொளுத்தும். குறிப்பாக  மீனம்பாக்கம் விமான நிலையத்தின் உள் பகுதியில் 37.2 C ஆக பதிவாகியுள்ளது என கூறியுள்ளார்.