ஈழத் தமிழர் சுதந்திரமாக வாழ பொதுவாக்கெடுப்பு.. இங்கிலாந்து, கனடாவுக்கு புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை
கொழும்பு: ஈழத் தமிழர்கள் தங்களது தாயகத்தில் சுதந்திரமாகவும் சுய அதிகாரத்துடனும் வாழும் வகையிலான தீர்வைக் காண்பதற்கான பொது வாக்கெடுப்பை நடத்த இங்கிலாந்து, கனடா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளும் முன்வர வேண்டும் என புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் 16ஆவது ஆண்டு நிறைவுதினம் ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் தேதி உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்நாளையொட்டி தமிழர் பரப்பிலும் உலகலாவிய ரீதியிலும் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
அந்தவகையில், இந்த ஆண்டும் இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உட்பட பல நாடுகளில் நீதிக்கான பேரணிகள் இடம்பெற்றன. முள்ளிவாய்க்கால் மற்றும் யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக நீதி கோரி இங்கிலாந்தில் நடத்தப்பட்ட பேரணியில் நூற்றுக்கணக்கான புலம்பெயர் மற்றும் உலகத் தமிழர்கள் கலந்துகொண்டனர்.
இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள், இலங்கையில் இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வையும் வலியுறுத்திய கோரிக்கைகளை முன்வைத்தனர். இங்கிலாந்து, கனடா, ஐரோப்பிய நாடுகள் உட்பட சர்வதேச நாடுகள் ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் நீதியை பெற்றுக்கொடுக்கும் செயல்பாட்டில் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்றும் பேரணியில் கலந்துகொண்ட தமிழர்கள் வலியுறுத்தினர்.
மேலும், கடந்த சில நாட்களாக இனவழிப்பை மறைத்து நீதியை மழுங்கச் செய்யும் செயல்பாடுகளை முன்னெடுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கு ம்தமது கண்டனத்தையும் தமிழர்கள் தெரிவித்தனர்.