டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
சென்னை:தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) தொடர்பான மதுபானக் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்குத் (DVAC) தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த புகார்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று தமிழ்நாடு முழுவதும் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்களை விநியோகம் செய்யும் தனியார் மதுபான உற்பத்தி ஆலைகள், டாஸ்மாக் குடோன்கள் மற்றும் அதுதொடர்புடைய அலுவலர்களின் அலுவலகங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 41 இடங்களில் இந்த லஞ்ச ஒழிப்புச் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் சோதனையின் பின்னணி :
தலைநகர் சென்னையில், தியாகராய நகர் (தி.நகர்) தணிகாசலம் சாலையில் அமைந்துள்ள ஒரு பிரபல தனியார் மதுபான நிறுவனத்தின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் காலையிலேயே அதிரடியாக நுழைந்து சோதனையைத் தொடங்கினர். அங்குள்ள ஆவணங்கள், கணக்கு வழக்குகள் மற்றும் கணினிகளில் உள்ள தரவுகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரைண நடத்தியதாக சொல்லப்படுகிறது.
கோவையில் பரவலான லஞ்ச ஒழிப்பு வேட்டை :
கோயம்புத்தூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் குழுக்களாகப் பிரிந்து சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பீளமேடு, பொள்ளாச்சி, நரசிம்ம நாயக்கன்பாளையம், நவகரை ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் பிரபல மதுபான உற்பத்தி ஆலைகள் மற்றும் டாஸ்மாக் கிடங்குகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மதுபான உற்பத்தி, சரக்கு போக்குவரத்து, கொள்முதல் ஆவணங்கள் மற்றும் வரி ஏய்ப்பு ஏதேனும் நடந்துள்ளதா என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சோதனையின் முக்கிய நோக்கம் :
டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படும் நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதா, தரம் குறைந்த மதுபானங்கள் விநியோகம் செய்யப்படுகிறதா மற்றும் இதில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதே இந்தச் சோதனையின் முதன்மை நோக்கமாகும்.
இன்று காலை முதல் நடைபெற்று வரும் இந்தச் சோதனையில் பல முக்கியமான ஆவணங்கள் மற்றும் ரொக்கப் பணங்கள் கைப்பற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே, இதில் பிடிபட்ட ஆவணங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிடும் எனத் தெரிகிறது. இந்த அதிரடிச் சோதனை தமிழக அரசியல் மற்றும் அரசு வட்டாரங்களில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.