Tasmac: 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்யக் கூடாது.. ஸ்ட்ரிக்ட் உத்தரவு

Su.tha Arivalagan
May 14, 2026,11:23 AM IST

சென்னை: 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்று டாஸ்மாக் கடைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தவெக ஆட்சி வந்த பிறகு பெண்களின் பெரும் பிரச்சினையாக உள்ள டாஸ்மாக் மதுக் கடைகள் மீதான பிடியை இறுக்க ஆரம்பித்துள்ளது. முதல் கட்டமாக வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் உள்ளிட்டவற்றுக்கு அருகே உள்ள 717 கடைகளை மூட முதல்வர் ஜோசப் விஜய் அரசு உத்தரவிட்டது.


இந்த நிலையில் தற்போது மது வாங்குவோரைக் கண்காணிக்கும் இன்னொரு உத்தரவு வந்துள்ளது. இதுதொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்களில் விதிகள் 2003 விதி எண் 11A -ன் படி 21-வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.


மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளரின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களிடம் வயதிற்கான ஆதாரமான ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதேனும் உரிய ஆவணங்களை சரிபார்த்து 21-வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே மதுபானங்களை விற்பனை செய்யபட வேண்டும். 




மேலும் 21 வயதிற்கு கீழ் உள்ள வாடிக்கையாளருக்கு மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு மதுக் கடைகள் மீதான இந்த நடவடிக்கை வரவேற்பைப் பெற்றுள்ளது. இதை தொடர்ந்து நடத்தி படிப்படியாக மதுக் கடைகளே இல்லாத நிலையை முதல்வர் விஜய் ஏற்படுத்த வேண்டும் என்றும் பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.