தமிழகம் முழுவதிலும் ஆசிரியர் தகுதித்தேர்வு... இன்றும், நாளையும் நடைபெறுகிறது!

Meenakshi
Nov 15, 2025,03:58 PM IST

சென்னை: தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு எனப்படும் TET தேர்வுகள் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.


தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்படும். இதற்கான தேர்வை ஆண்டு தோறும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.


நடப்பாண்டுக்கான  ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வெளியானது. அதன்படி இடைநிலை ஆசிரியர்​களுக்​கான டெட் தேர்வு தாள் -1, நவம்பர் 15-ந் தேதியும் (இன்று), பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 தேர்வு 16-ம் தேதியும் (நாளை) நடக்க இருக்கிறது. இந்த ஆசிரியர் தகுதித்தேர்வை எழுத, 4.80 லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.




இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை எழுத  1 லட்சத்து 7 ஆயிரத்து 370 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வுக்கு தமிழகத்தில் 1,241 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டு நாட்கள் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வை கண்காணிக்க ஆசிரியர் தேர்வு வாரியம், 32 சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது. 


ஒரு சிலர் விண்ணப்ப அடையாள எண் மற்றும் கடவுச்சொல்லை மறந்து விட்டதால் ஹால் டிக்கெட்டுகளை பெறுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதற்கு உதவுமாறு தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு ஆசிரியர் தேர்வு வாரியமும் விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுகள் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.