தேரே இஷ்க் மெய்ன் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல்.. புதிய சாதனை படைத்த நடிகர் தனுஷ்!
- அ.கோகிலா தேவி
மும்பை: தனுஷ் நடித்துள்ள தேரே இஷ்க் மெய்ன் இந்தி திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறதாம். படம் வெளியான மூன்று நாட்களில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம் இப்படம்.
இயக்குனர் ஆனந்த் எல்.ராய் உடன் தனுஷ் மூன்றாவது முறையாக இணைந்து நடித்திருக்கும் இந்தி திரைப்படம்தான் இது. இதில் கதாநாயகியாக க்ரித்தி சனோன் நடித்துள்ளார். ஆனந்த் ராயுடன் தனுஷ் இணையும் படம் என்பதால் முன்பே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது அந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது வசூல் மூலம் தெரிய வந்துள்ளது.
படத்தின் கதை ரொம்ப வித்தியாசமானது.. இந்திய விமானப்படையின் பைலட்டாக இருக்கும் ஷங்கர் (தனுஷ்), கட்டுக்கடங்காத கோபமும் வன்முறைக் குணமும் கொண்டவர். அவருக்கு மனரீதியான ஆலோசனை வழங்க உயர் அதிகாரியால் உத்தரவிடப்படுகிறது. ஒரு மனநல நிபுணரான முக்தி (க்ரித்தி சனோன்) ஷங்கரைச் சந்திக்கிறார். இருவருக்கும் கடந்த காலத்தில் ஒரு தீவிரமான காதல் இருந்ததை அவர்கள் உணர்கிறார்கள். வன்முறை, துரோகம், காதல் வலி ஆகியவற்றின் பின்னணியில், ஷங்கரும் முக்தியும் ஒருவரையொருவர் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதை.
முதல் மற்றும் இரண்டாம் நாள் வசூல் வேட்டை சுமார் 33.50 கோடியாக இருந்தது. தற்போது 3வது நாளில் 50 கோடியைத் தாண்டியுள்ளது. இந்தி சினிமாவில் தனுஷின் படம் ஒன்று அதிக அளவில் வசூல் செய்திருப்பது இதுதான். அந்த வகையில் தனுஷ் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
படத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைத்துள்ளா். அவரது இசையும் இப்படத்தின் வெற்றிக்கு இன்னொரு முக்கியக் காரணமாகும்.
தேரே இஷ்க் மெய்ன் இந்தியில்தான் வசூலித்து வருகிறது. தமிழில் இப்படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(அ.கோகிலா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)