ஜம்மு-காஷ்மீரில் உள்ள சிறைகளைத் தாக்க தீவிரவாதிகள் திட்டம்?.. பாதுகாப்பு அதிகரிப்பு!
ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் உள்ள சிறைகளில் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஸ்ரீநகரின் மத்திய சிறை மற்றும் ஜம்முவின் கோட் பால்வால் சிறை போன்ற உயர் பாதுகாப்பு வசதிகள் ஆபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இங்குள்ள கைதிகள் பலரும் பயங்கரவாத செயல்களுக்கு உதவி செய்ததால் கைதானவர்கள். அதாவது பாகிஸ்தானிலிருந்து ஊடுறுவி வரும் தீவிரவாதிகளுக்கு தங்குமிடம், போக்குவரத்து போன்ற உதவிகளை செய்து தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்தால் கைதானவர்கள்.
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் உளவுத்துறை புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதையடுத்து சிறைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2023 வரை ஜம்மு காஷ்மீர் சிறைகளின் பாதுகாப்பை சிஆர்பிஎப்தான் கவனித்து வந்தது. அந்த ஆண்டு முதல் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை ஏற்றது.
தற்போதைய புதிய எச்சரிக்கையைத் தொடர்ந்து சிஐஎஸ்எப் மூத்த அதிகாரி, ஸ்ரீநகரில் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து நிலைமையை ஆய்வு செய்தார். தெற்கு காஷ்மீரின் காடுகளில் இன்னும் அதிகமான பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில், சிறைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளன. எந்தவித பாதுகாப்பு குறைபாடும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.