இந்திய வரலாற்றில் தடம் பதித்த பெண் ஆளுமைகள்.. வரலாறு அறிவோம்!

Su.tha Arivalagan
Mar 08, 2026,11:23 AM IST
- டி. ஜெனிட்டா ரீனா

உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இந்தியாவில் தடம் பதித்த சில பெண் ஆளுமைகள் குறித்து அறிவோம்.

சுதந்திர இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமை படைத்தவர் இந்திரா காந்தி. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்ற பெருமை படைத்தவர் சாவித்திரிபாய் பூலே. தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்ற சாதனை ஜானகி ராமச்சந்திரன் வசம் உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக அந்தப் பதவியை அலங்கரித்த பெருமைக்குரியவர் பத்மினி ஜேசுதுரை. தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்ற பெருமிதம் திலகவதி ஐ.பி.எஸ்ஸுக்கு உண்டு.

சென்னையின் முதல் பெண் மேயராக இருந்தவர் திருமதி தாரா செரியன். இளம் வயது பெண் மேயராக இருந்த பெருமைக்குரியவர் தற்போதைய மேயர் பிரியா ராஜன். தமிழகத்தின் முதல் பெண் தலைமைச் செயலாளராக இருந்தவர் லட்சுமி பிராணேஷ்.



ஆளுமை என்பது யாது?

ஆளுமை என்பது ஒருவரின் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் நிலைத்தன்மை கொண்டிருப்பதாகும். தனக்கு வரும் சவால்களைத் தனது தனித்திறமையைப் பயன்படுத்தித் தீர்வு காண்பதே சிறந்த ஆளுமை.

வசதியான, பாதுகாப்பான சூழலில் இருந்து வெளியேறி, எந்தவொரு கடினமான சூழலுக்கும் தன்னைத் தகவமைத்துக் கொண்டு, தன்னம்பிக்கையோடு முன்னேற்றப் பாதையில் செல்வதே உண்மையான ஆளுமைத் திறன் ஆகும்.

மகாகவி பாரதியார் அன்றே பெண்களின் முன்னேற்றத்தைப் பற்றிப் பாடினார்:

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்!"

"எட்டு அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி!" என்று முழங்கியவர் பாரதி.

நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வை
நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறி

இவை அனைத்தும் இருந்தால் பெண்கள் மிகச்சிறந்த ஆளுமைகளாக இந்த உலகத்தில் உயர முடியும் என்பதை பாரதி அன்றே நிருபித்துக் காட்டினார்.

அனைவருக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துகள்

(டி. ஜெனிட்டா ரீனா, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர்)