தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
Jan 18, 2026,11:33 AM IST
சென்னை: தை அமாவாசையை முன்னிட்டு இன்று (ஜனவரி 18, 2026) தமிழ்நாட்டின் பல்வேறு நீர்நிலைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு தங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளித்து வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமையான இன்று தை அமாவாசை என்பதால், அதிகாலை முதலே புனித நீர்நிலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தக் கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளித்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் அதிகாலை முதலே மக்கள் திரண்டனர். காவிரி ஆற்றில் புனித நீராடி, எள்ளும் தண்ணீரும் இறைத்து பிதுர் கடன்களை நிறைவேற்றினர்.
கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் சூரிய உதயத்திற்கு முன்பே மக்கள் திரண்டு நீராடினர்.
பூம்புகாரில் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தனர்.
திருநெல்வேலியில், தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
அமாவாசை திதியானது ஜனவரி 18 (இன்று) அதிகாலை 1:20 மணிக்கு தொடங்கி, ஜனவரி 19 (திங்கட்கிழமை) அதிகாலை 2:31 மணி வரை நீடிக்கிறது. சூரிய உதயத்திற்குப் பிறகு காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை தர்ப்பணம் செய்ய உகந்த நேரமாக ஆன்மீகப் பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தை அமாவாசையையொட்டி, ராமேஸ்வரம் மற்றும் முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்குப் போக்குவரத்துத் துறை சார்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கடற்கரை மற்றும் ஆற்றங்கரைப் பகுதிகளில் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.