தைப் பூசத் தலைவன் !
- எம்.கே. திருப்பதி
பூசத் திருவிழா -- தை
மாசத் திருவிழா
சமத்துவ பதியின்
மகத்துவ பெருவிழா!
பழனியம்பதியில்
கழனியின் கதிராய்
பக்தர்கள் கூட்டம்
காட்சிக்கு தெரியும்
கதிரின் கதிராய்!
அரோகரா கோஷம்
அகிலத்தை எட்டும்
வான வீட்டின்
வாசலைத் தட்டும்!
காவடி ஆட்டம்
காட்சியின் விருந்து
கடைதேற நீயும்
கண்களால் அருந்து!
இந்நாள்
நகருக்கு நகர்
நகரா ஒலிக்கும்
வீதிக்கு வீதி
விளக்கொளி நிறைக்கும்!
வீடுகள் அனைத்தும்
விழாக்கோலம் பூணும்
ஏடுகள் அவனின்
பீடுகள் பாடும்!
கார்த்திகை பெண்களின்
கரத்தில் தவழ்ந்த
மூர்த்திக்கு நாமும்
முகமன் கூறலாம்!
சேவல் கோடியோனின்
சீர்த்தியை நேர்த்தியை
கூவல் ஒன்றே
குலத்திற்கு மேன்மை!
காவல் தெய்வம்
காலடி பிடித்து
கேவல் ஒன்றே
கேண்மை நல்கும்!
ஏமம் அருளும்
எம்பிரானின்
நாமம் ஒன்றாலே
சேமம் செழிக்கும்!
மயில் ஏறும் மலையனை
கயிலை மலையேறும்
மைந்தனை
ஆனை முகத்தோனின்
ஞானத் தம்பியை
சக்தி தேவியின்
பக்திப் பனுவலை...
அதம்செய்த அவுணனை
வதம்செய்த வள்ளலை
இதம் செய்வோம்!
தந்தைக்கு
பாடம் படித்த விந்தைக்கு
முத்தமிழின்முந்தைக்கு
ஏற்றம் ஈயும் எந்தைக்கு...
வைக்கிறேன் தமிழ்வணக்கம்!
வைத்தால் வாய்க்கும் எனக்கு
தமிழ் இணக்கம்!
இந்நாள்
இமயச்செல்வி
சக்திவேலை
பணிவோம் அந்த
பிள்ளையின் பாதம்
தணிவோம் இந்த
பிறப்பின் பேதம்!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)