செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

Su.tha Arivalagan
Sep 19, 2026,01:48 PM IST

சென்னை : தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'தாய்மாமன் தங்க மோதிர திட்டம்' வரும் 28-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தமிழக முதலமைச்சர் விஜய் முறைப்படி தொடங்கி வைக்கவுள்ளார். 


இருப்பினும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கிய செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களைத் தவிர, மாநிலத்தின் பிற அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. 


தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்: 




தமிழக அரசால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த 'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்', அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்த்துகளைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசின் சார்பில் இலவசமாகத் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும்.இந்த திட்டமானது ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும், சமூக ரீதியிலான ஆதரவையும் வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.


இரு மாவட்டங்களுக்கு மட்டும் விதிவிலக்கு ஏன்?


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) அமலில் இருப்பதன் காரணமாக, வாக்காளர்களைக் கவரும் வகையிலான புதிய நலத்திட்டங்களையோ அல்லது இலவசங்களையோ அந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் தொடங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணத்தினாலேயே, செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களை தவிர்த்து, ஏனைய மாவட்டங்களில் இத்திட்டம் வரும் 28-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இடைத்தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் முடிவடைந்து, தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னர், விடுக்கப்பட்ட இந்த இரு மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பொதுமக்கள் வரவேற்பு :


அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கும் ஏழை எளிய தாய்மார்களுக்கு இத்திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். வரும் 28-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ள நிலைக் குறித்து, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தினமும் 100 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.