குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்.. தைப்பூசம்.. வாங்க வேண்டிய முக்கிய பொருட்கள் மற்றும் சடங்குகள்
- ஸ்வர்ணலட்சுமி
தைப்பூசம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் க்ரவுஞ்ச மலையை உடைத்து தாரகாசுரனை வதம் செய்த நாள். தன் அன்னை பார்வதியிடம் இருந்து வேலை வாங்கி அசுரனை வென்ற நாள் இந்த தைப்பூசம்.
ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி விரதம் சக்தி வழிபாட்டிற்கு உகந்ததாகும். இன்று தைப்பூசம் மற்றும் பௌர்ணமியும் சேர்ந்து வருவதும் மிகச் சிறப்பு. இன்று குரோதி வருடம் உத்ராயணம் ஹேமந்த ருது தை மாதம் 29ஆம் நாள். வளர்பிறை சதுர்த்தி திதி மாலை 6: 56 வரை அதன் பின்பு பௌர்ணமி திதி. நட்சத்திரம்: பூசம் நட்சத்திரம் மாலை 6:34 வரை அதன் பின்பு ஆயில்யம் நட்சத்திரம்
இன்று புனித நதிகளில் நீராட சிறந்த நாள். வடலூரில் ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெறுகிறது. திருவண்ணாமலையில் கிரிவலம் செய்ய மிகவும் சிறப்பான நாள். தைப்பூசம் நாளான இன்று மஞ்சள் நிற பூக்கள் சிகப்பு நிற பூக்கள் முருகனுக்கு அலங்காரம் செய்ய உகந்தது .செவ்வரளி மற்றும் செம்பருத்தி பூ போன்ற பூக்கள் வைத்து முருகனை வழிபடலாம்.
துவரம் பருப்பு மகாலட்சுமியின் அம்சம். அதில் மகாலட்சுமி குடிகொண்டு இருப்பதாக ஐதீகம் எனவே துவரம் பருப்பு வாங்க உகந்த நாள்.கல் உப்பு வாங்க வேண்டும் .மகாலட்சுமி கடாக்ஷம் கிடைப்பது உறுதி. மஞ்சள் கொம்பு, மஞ்சள் தூள் வாங்கலாம். மஞ்சள் ,குங்குமம், தேன், பால் போன்ற பொருட்களை கோவிலுக்கு வாங்கி கொடுக்கலாம். தீபம் ஏற்ற நெய் வாங்கிக் கொடுப்பது மிகவும் சிறப்பு.
இனிப்பு சுவைக்கு கற்கண்டு மேலும் மஞ்சள் நிற இனிப்புகள் வாங்கலாம். தங்கம், வெள்ளி அவரவர் வசதிக்கும் ,நிலைமைக்கும் ,குடும்ப சூழலுக்கும், பொருளாதாரத்திற்கும், ஏற்ப வாங்கலாம்.
சடங்குகள்:
முருக பக்தர்கள் தூய்மையான ஆடை உடுத்தி அதிலும் ஆரஞ்சு நிற ஆடை அணிந்து காவடி எடுக்கும் வழக்கம் அனைத்து முருகன் கோவில்களிலும் உண்டு. உண்ணாவிரதம் இருந்து பால்குடம் ,காவடி ஏந்துதல் நடைபாதை வழியாக பழனியில் ஊர்வலம் வருவர். பக்தர்கள் தலையை மொட்டை அடித்து தங்கள் வேண்டுதலை முருகப்பெருமானுக்கு செலுத்துவார்கள்.
பக்தர்கள் தங்கள் குடும்ப நலனுக்காகவும் தன் சந்ததியினர் நலனுக்காகவும், வளமைக்காகவும் ,தங்கள் பக்தியை செலுத்தி முருகப் பெருமானை வழிபட உகந்த நாள் தைப்பூச நாள்.