அறுபடை வீடு கொண்ட திருமுருகா.. தைப்பூசம் !

Su.tha Arivalagan
Jan 31, 2026,04:38 PM IST

- ஆ.வ.உமாதேவி


பூசம் என்றால் என்ன? 


27 நட்சத்திர வரிசையில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். இது கடக ராசியில் அமையப்பெற்று சனியை அதிபதியாகவும் குருவை அதி தேவதை ஆகவும் கொண்டது. இந்த நட்சத்திரம் ஞானம், உறுதிப்பாடு மற்றும் பொறுமையின் அடையாளமாக திகழ்கிறது. 


பூச நட்சத்திரம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. புதிய வணிகத்தை தொடங்கவோ அல்லது சொத்துகள் வாங்கவோ இது ஒரு நல்ல நாளாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், உழைப்பால் உயர்ந்து வளம் மற்றும் செழிப்பை அடையக் கூடியவர்கள். பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீ தட்சணாமூர்த்தி மற்றும் மகாலட்சுமியை வழிபடுவது மிகவும் நல்லது. 




தைப்பூசம் என்றால் என்ன? 


தைப்பூசம் என்பது தமிழ் மாதமான தையில் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் இணையும் நன்னாளில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய இந்து பண்டிகையாகும். 


தைப்பூசத்திற்கு முருகனுக்குமான தொடர்பு! 


சூரபத்மன் மற்றும் பிற அசுரர்களிடமிருந்து தேவர்களை காக்க, முருகப்பெருமான் பார்வதி தேவியிடம் இருந்து வீர வேலை பெற்ற தினம் தைப்பூசம் என்று புராணங்கள் கூறுகின்றன. 


பார்வதி தேவியிடம் வேல் பெற்ற முருகன் சூரபத்மனை வென்று தீமைகளை அழித்த நாளாகவும் இது கொண்டாடப்படுகிறது. 


அகத்திய முனிவரின் சீடரான இடும்பன், முருகனின் கட்டளைப்படி காவடி சுமந்து வந்து முருகனை வணங்கியது தைப்பூச நாளில் என்று சொல்லப்படுகிறது. எனவேதான், இந்நாளில் அறுபடை வீடுகளிலும் முருகப் பெருமானுக்கு காவடி சுமந்து பக்தர்கள் வழிபடுகின்றனர். 


சிவன் மற்றும் பார்வதி தேவி தைப்பூச நாளில் ஞான நடனம் புரிந்ததாகவும் அதை தேவர்கள் கண்டதாகவும் மற்றொரு நம்பிக்கை உள்ளது. 


முருகப்பெருமானுக்கு மிகுந்த உகந்த நாளாக இருப்பதால், பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி மற்றும் மலர் காவடி எடுத்து வழிபடுகின்றனர். 


முருகன் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நாளில் அலகு குத்தி, வேல் குத்தி நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.


தைப்பூசத்திற்கு முந்தைய 48 நாட்கள் விரதம் கடைபிடித்து, தைப்பூசத்தன்று முருகனை வழிபடுவது மிகவும் சிறந்தது. தீமைகளை நீக்கி நன்மைகளையும் வெற்றிகளையும் உணர்த்தும் நாளாக உள்ளது.


தைப்பூசத்திற்கும் வள்ளலார்க்கும் ஆன தொடர்பு: 


வடலூர் ராமலிங்க அடிகள் தைப்பூச நாளில் தான் ஜோதி ரூபமாக இறைவனுடன் கலந்தார். எனவே வள்ளலார் வழியில் இது ஜோதி தரிசன நாளாக கொண்டாடப்படுகிறது. 


வடலூர் என்பது கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய ஆன்மீக தலமாகும். 1872ல் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை வள்ளலார் நிறுவினார். உருவ வழிபாடு இல்லாமல் ஜோதி வழிபாட்டை வலியுறுத்தினார். ஏழு திரைகளுக்கு அப்பால் ஜோதி தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 


வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை நிலைநாட்டினார். பசித்தோர்க்கு உணவளிக்கும் வகையில் வள்ளலார் அமைத்த தர்மச்சாலை இன்று வரை பல்லாயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கி வருகிறது. அவர் மூட்டிய அடுப்பு இன்று வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. இங்கு ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திர நாளில், பக்தர்கள் வந்து ஜோதியை வணங்கி விட்டு செல்கின்றனர். 


திருத்தணியில் வள்ளலார் கோயில்! 


திருத்தணி, பெரியார் நகரில் திரு அருட்பிரகாச வள்ளலார் திருக்கோயில் உள்ளது. திரு.பெரியசாமி என்பவர் இக்கோயிலை பராமரித்து வருகிறார். ஆண்டுதோறும் தைப்பூச நாளில் சிறப்பு பூசைகள், வழிபாடுகள், சொற்பொழிவுகள், அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. பக்தர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி தந்து, இவ்விழாவை சிறப்பாக கொண்டாட துணை செய்கின்றனர். 


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி! 

தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி! 


என்னும் ஞான மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க நம் வாழ்க்கை சிறப்படையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 


வாழ்க வள்ளலார்! வளர்க வையகம்! 


(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றுகிறார்)