தலைவர் 173...மாஸாக வந்த சூப்பர் அப்டேட்...கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை : தமிழ் திரையுலகின் இரு பெரும் ஜாம்பவான்களாக திகழும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். ரஜினிகாந்தின் 173-வது திரைப்படமான 'தலைவர் 173', கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ளது.
இந்தத் திரைப்படத்தை 'டான்' பட புகழ் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணி ஏற்கனவே பல பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் கொடுத்துள்ள நிலையில், மீண்டும் இவர்கள் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் இணைந்து தயாரிக்கும் இப்படம், பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக உள்ளது.
இந்த படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் மாஸான போஸ்டர் உடன் வெளியிடப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள போஸ்டர் மிகவும் வித்யாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் பல கத்தரிக்கோல்கள் ஒரு நட்சத்திர வடிவில் அடுக்கப்பட்டுள்ளன. இது படத்தின் கதைக்களம் தையல் கலை (Tailoring) அல்லது அது சார்ந்த ஒரு பின்னணியைக் கொண்டிருக்கலாம் என்ற யூகத்தை எழுப்புகிறது.
கருநீல நிற ஜீன்ஸ் துணி போன்ற பின்னணியில், பழங்கால வேலைப்பாடுகள் கொண்ட கத்தரிக்கோல்கள், தையல் மெஷின் பாகங்கள், பாஸ்போர்ட் மற்றும் துப்பாக்கித் தோட்டாக்கள் சிதறிக் கிடக்கின்றன. போஸ்டரின் மேற்பகுதியில் "Every Family Has A Hero" (ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நாயகன் உண்டு) என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இது ஒரு உணர்ச்சிகரமான குடும்பக் கதையாகவும், அதே சமயம் ரஜினி பாணி ஆக்சன் கலந்த திரைப்படமாகவும் இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
இந்த மெகா பட்ஜெட் திரைப்படம் 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் காந்தத் திரையாளுமையும், சிபி சக்ரவர்த்தியின் இளமைத் துடிப்பான இயக்கமும் இணைந்து ஒரு புதிய ரக சினிமாவைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நடிகர் - தயாரிப்பாளர் என்ற ரீதியில் இணைந்திருப்பது கோலிவுட்டின் இந்த ஆண்டின் மிகப்பெரிய செய்தியாகப் பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ரஜினி-கமல் இருவரும் இணைந்து ஒரு காட்சியில் திரையில் தோன்றுவதற்கும் அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஷூட்டிங் துவங்குவதற்கு முன்பே இந்த படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.