தலைவர் 173 ஷூட்டிங்...சூப்பர் ஸ்டார் ரஜினியே பகிர்ந்த மாஸ் அப்டேட்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான 'தலைவர் 173' குறித்த உற்சாகமான தகவல்களை நடிகர் ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர்களைச் சந்தித்த அவர், இந்தப் புதிய படம் குறித்த முக்கிய அப்டேட்களை வழங்கினார்.
'டான்' பட புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இந்தப் படத்தை இயக்கவுள்ளார். முதலில் சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் விலகியதைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கிறது. இந்த படம் பற்றி அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருந்த நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் பற்றி அப்டேட்டை ரஜினியே வெளியிட்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், "தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இது ஒரு பக்கா கமர்ஷியல் என்டர்டெய்னராக (Commercial Entertainer) இருக்கும்," என்று தெரிவித்தார். இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். படம் 2027 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பின் போது, விவசாயிகளின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய ரஜினி, "விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான் நாடு செழிக்கும்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்தத் திரைப்படம் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் ஆகிய இரு திரையுலக ஜாம்பவான்களையும் பல ஆண்டுகளுக்குப் பிறகு தயாரிப்பாளர்-நடிகர் என்ற முறையில் இணைத்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.