மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
Jan 18, 2026,12:41 PM IST
சென்னை: நடிகர் ஜீவா மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது படத்திற்கு கிடைத்துள்ள மகத்தான ஆதரவும் மக்களின் பேரார்வமும் அவரை மட்டுமல்ல திரைத் துறைக்கும் கூட மிகப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
இதுதாங்க தமிழ்நாடு.. இதுதான் தமிழ் மக்கள்.. ஒரு நல்ல கதை வந்தால் போதும்.. உடனே ஓடி வந்து கரம் கொடுப்பார்கள், கை தட்டுவார்கள், ஊக்கம் கொடுப்பார்கள், தூக்கி விடுவார்கள்.. அதுதான் இப்போது நடந்துள்ளது.
பராசக்தி என்று ஒரு பெரிய படம், இன்னொரு பக்கம் வா வாத்யாரே என்று மற்றொரு பெரிய படம்.. அந்தப் பக்கம் சிறை என்று ஒரு நல்ல படம்.. 20 நாட்களையும் தாண்டி தியேட்டர்களில் உலா வரும் நல்லதொரு படம். இந்தப் படங்களுக்கு மத்தியில் தியேட்டர்களுக்கு வந்த படம்தான் தலைவர் தம்பி தலைமையில்.
இடையில் வந்தாலும் கூட அடித்து நொறுக்கி வருகிறது தலைவர் தம்பி தலைமையில். படத்தின் கதை மக்களை வெகுவாக கவர்ந்து விட்டது. மேலும் பாசிட்டிவ் விமர்சனங்களும் குவிய ஆரம்பிக்கவே படம் இப்போது அரங்கு நிறைந்த காட்சிகளாக அதிர வைத்துக் கொண்டுள்ளது. இந்தப் படத்தின் திடீர் வெற்றியால் பராசக்தியே திணறிப் போய் ஒதுங்கி விட்டதாம்.
நடிகர் ஜீவா மற்றும் அவரது குழு இந்த பெரும் வெற்றியால் மகிழ்ந்து போயுள்ளனர். இந்த வெற்றி குறித்து ஜீவா நெகிழ்ச்சியுடன் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில்,
என் அன்பு மக்கள் அனைவருக்கும்,
#ThalaivarThambiThalamaiyil திரைப்படத்தின் மீது நீங்கள் பொழியும் அளவற்ற அன்பையும் ஆதரவையும் கண்டு நான் உண்மையிலேயே நெகிழ்ந்து போயிருக்கிறேன். உங்கள் ஒவ்வொரு செய்தியும், ஒவ்வொரு ஊக்கமளிக்கும் வார்த்தையும் என் மனதை ஆழமாகத் தொட்டுள்ளது.
நிச்சயமாக, என்னைப் பற்றிய அனைத்து மீம்களையும் (Memes) பார்த்தேன். அந்த எடிட்களுக்கு (Edits) என் கூடுதல் அன்பு! அவை அனைத்தும் உங்கள் அன்போடும் ஆதரவோடும் பகிரப்பட்டுள்ளன, மேலும் அவை இந்தப் பயணத்தை இன்னும் சிறப்பானதாக்குகின்றன.
படம் பார்க்கும், பார்க்கப்போகும் அனைத்து கண்களுக்கும், என் நன்றிகள். விதிமுறைகளை (Conditions) பின்பற்றி, #TTT திரைப்படத்தை திரையரங்குகளில் மட்டுமே பார்த்து மகிழுங்கள்! என்று கூறியுள்ளார் ஜீவா.
உண்மையிலேயே படம் படு ஜாலியாக இருக்கிறது. சிம்பிளான கதை.. அந்தக் கதையை வைத்து அழகாக பின்னப்பட்ட திரைக்கதை.. எங்குமே சுணக்கம் இல்லை. தேவையில்லாத வசனங்கள் இல்லை. எந்த கேரக்டரும் வீணாகவில்லை.. அதை விட முக்கியமாக நகைச்சுவையை அத்தனை அழகாக படம் முழுக்க விரவியுள்ளனர். அதற்கு ஒரு அப்ளாஸ் எக்ஸ்டிராவாக போடலாம். படத்தை தியேட்டரில் பாருங்கள்.. இன்னும் ஜாலியாக ரசிக்கலாம்.