மழை நேரப் பயணம்!

Su.tha Arivalagan
May 05, 2026,04:58 PM IST

- முனைவர் தி. தங்கலட்சுமி


மழைக் காலத்து 

இரவு நேரப் பேருந்தின் 

முன்னிருக்கைப் பயணங்கள்...

சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள்!


உடையாத கண்ணாடியில்

உடைந்த கண்ணாடியின் 

ஓராயிரம் சில்லுகள்...


ஒரே மாதிரியாய்த் 

தேர்ந்தெடுத்து

ஒட்டி வைத்தாற்போல்!


வான் குழந்தை 

உமிழ்ந்த

அமுத எச்சில் 

முத்துச் சிதறலாய்...!




ஒளிரும் நட்சத்திரத் 

துளித் தூவலாய்...!


எதிர்சாரி வாகன ஒளியில் 

மின்னி மிளிர்ந்திடும் 

கண்ணாடியில் படிந்திட்ட 

விண் துளிகள்...

ஓராயிரம் மின்மினிகளாய்!


 சொர்க்கத்தின் பன்னீர்த்தூவல் 

வரவேற்பாய்...

வான்மழையின் ஆசீர்வாதங்கள்!


பயணத்தை ரசித்தே தொடர்ந்திட

நிறுத்தங்களே இல்லாத 

தொலைதூரப் பயணங்களாய்... 

பரவசமூட்டும் கார்காலங்கள் 

எப்போதும் நெஞ்சின் நினைவுகளில் 

நீங்காத இன்பங்கள்

சுரந்து நிறைக்கட்டும்! 


(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).