அதிரும் மதுரை... மக்கள் வெள்ளத்தில் விஜய்.. தொடங்கியது தவெக 2வது மாநில மாநாடு!
மதுரை: மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தவெக தலைவர் விஜய் மேடைக்கு வந்து அனைவரையும் வணங்கி விட்டு ரேம்ப்பில் நடந்தவாறு தொண்டர்களை சந்தித்து அவர்களை குஷிப்படுத்தினார்.
மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் 2வது மாநில மாநாடு பரம்பரிய மிக்க கலை நிகழ்ச்சியுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கியது. மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி என்ற பகுதியில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் மாநாட்டி நிகழ்வுகள் தொடங்கியுள்ளன. "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு" என்ற முழக்கத்துடன் மாநாடு நடைபெற்று வருகிறது.
முன்னதாக மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்க இருந்த நிலையில், கூட்டம் அதிகரித்து வருவதன் காரணமாக தற்போது முன்கூட்டியே மாநாடு தொடங்கியுள்ளது. விஜய்யின் பெற்றோர் மாநாட்டு மேடைக்கு வருகை தந்துள்ளனர். தவெக 2-வது மாநில மாநாடு தொடங்கியுள்ள நிலையில், மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது மாநாடு தொடங்கி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், தவெக தலைவர் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டு சிறப்பு பாடல் ஒலிக்க, விஜய் மாநாட்டு மேடைக்கு வந்தார். மேடைக்கு வந்ததும், விஜய் தொண்டர்களுக்கு மத்தியில் ரேம்ப் வாக் சென்றார்.
வழக்கம் போல கூட்டம் அலை மோதியபடி விஜய்யைப் பார்க்க துடித்தது. கொடிகளைத் தூக்கிப் போட்டு விஜய்யிடம் அன்பை வெளிப்படுத்தினர் தொண்டர்கள். விஜய்யும் அவர்களின் அன்பை ஏற்றபடி நடந்து சென்றார். ரேம்ப் வாக்குக்குப் பிறகு தலைவர்கள் படங்களுக்கு விஜய் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு கட்சிக் கொடி ஏற்றப்பட உள்ளது. தொடர்ந்து கொள்கைப் பாடலும், கொடி பாடலும் வெளியிடப்பட்டு உறுதிமொழி ஏற்கப்படும். அதன் பின்னர் வரவேற்புரை வாசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.