கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: காலையிலேய ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர் விஜய்

Su.tha Arivalagan
May 15, 2026,10:56 AM IST

சென்னை: கடந்த திமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின்படி மே மாதத்திற்கு ரூ. 1000 நிதியை இன்று வழக்கம் போல பயனாளிகளின் கணக்கில் தவெக அரசு வரவு வைத்துள்ளது.


தவெக தேர்தல் அறிக்கையில் இந்தத் தொகையை ரூ. 2500 ஆக உயர்த்தித் தருவதாக விஜய் உத்தரவாதம் கொடுத்துள்ளார். ஆனால் தற்போதுதான் ஆட்சிக்கு வந்திருப்பதால் உடனடியாக இதை மறு சீரமைப்பு செய்ய முடியாது, அவகாசம் தேவை என்று நேற்று முதல்வர் கூறியிருந்தார். அதேசமயம், இந்தத் திட்டத்தின் கீழ் மே மாதத்திற்கான தொகை விரைவில் அளிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.


சொன்னபடி, வழக்கம் போல இன்று அந்தத் தொகை இன்று காலை பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தொகை வருமா வராதா என்ற குழப்பத்தில் இருந்த பெண் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் 'மகளிர் உரிமைத் தொகை' திட்டம் தங்குதடையின்றி தொடர்வது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.


பொதுமக்கள் தங்களின் வங்கி கணக்குகளைச் சரிபார்த்து இந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியின்படி, மக்கள் நலத்திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த முதல்வர் விஜய் தலைமையிலான அரசு முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.