நம்பிக்கை

Su.tha Arivalagan
Feb 02, 2026,10:25 AM IST

- ஆனந்தி. ச


பம்பரமாய் சுழலுகின்றது காலைப்பொழுது .. யார் எழுந்தாலும் எழாவிட்டாலும் இயற்கை தன் வேலையை செவ்வனே செய்து கொண்டுதான் இருக்கிறது .. பொழுது புலர்வதும் , காகம் கரைவதுமாய் தொடங்கிவிடும் அன்றைய பொழுது.. ஆனால் சித்தார்த்துக்கோ படுக்கையை விட்டு இன்னும் எழவே மனதில்லை.. இன்னும் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு தூக்கவேண்டுமென்று மனது ஏங்கியது .. ஆனால் உள்ளுணர்வோ வேலையை நினைத்தபடி பதபதைத்தது.. 


காலை 4 30 மணிக்கெல்லாம் அலாரம் வைத்துவிடுவான் . ஆனால் எழுந்துகொள்ளவே மாட்டான்.அவனிடம் கேட்டால்,

“ஐந்து நிமிடத்திற்கொரு முறை வருமே ஸ்னூஸிங் .. அதை அழுத்தி அழுத்தி தூங்கினால் .. ஆஹா..

அந்த சுகமான தூக்கத்தை வர்ணிக்கத்தான் வார்த்தைகளே இல்லை.”என பிதற்றுவான்.


இன்றும் அப்படித்தான் , முப்பது முறை அழுத்தியும் எழுந்தபாடில்லை.  அவனுடைய அறை நண்பன் மிகவும் கோபமான குரலில் “டேய் எருமை அந்த அலாரத்த நிறுத்திட்டுதான் தூங்கேண்டா “ எனக்கு இதனால தூக்கம் கெடுதுல்ல ,என்று உச்சிகொட்டி போர்வையின் அடியில் தஞ்சம் புகுந்தான்.


சித்தார்த்த் அலாரத்தை அணைக்க மனமில்லாமல் அணைத்துவிட்டு படுக்கையிலிருந்து எழுந்தான். பதினைந்தே நிமிடத்தில் பளிச்சென்று பக்காவா ரெடியானான். தோளில் லாப்டாப்  பேகை மாட்டியவன் பக்கத்திலிருந்த பஸ் ஸ்டாப்பில் ,பஸ்ஸிற்காக காத்திருக்கத்தொடங்கினான்.


பத்து நிமிடத்திற்கு மேலாகியும் அவனுக்கான பஸ் வரவேயில்லை.




“இன்னும் இருபதுநிமிடத்திற்குள்  இந்திரா நகர் போகவேண்டுமே ? “ என்ன செய்வது என்றபடி மனது அசைபோட்டது.. 


சே ! பத்து நிமிடத்திற்கு முன்னதாக எழுந்து கிளம்பியிருந்தா பஸ் பிடிச்சிருக்கலாம் போல ! மனசு பரிதவித்தது .

போனை கையிலெடுத்தவன், “மச்சி அரைமணிநேரமா பஸ் ஸ்டாண்ட்ல நிக்கிறேண்டா, எந்த பஸ்சுமே வரலடா “ என்று நா கூசாமல் புளுகினான்.


“இங்க ஆட்டோவெல்லாம் ஒன்னும் கிடைக்காது “  ஒரு மணிநேரம் மட்டும் எனக்கு பர்மிஷன் சொல்லுடா”

 அந்த பக்கத்து குரல் என்ன சொல்லியது எனத் தெரியவில்லை. 


“ப்ளீஸ் டா இந்த ஒரு தடவ மட்டும் சொல்லு மச்சி “ அடித்த தடவை நானே மேனேஜ் பண்ணிக்கிறேன் எனக்கூறி போனை துண்டித்தான் .


இந்த மாதத்தில இது நாலாவது பர்மிஷன். நான் வேணுமுன்னா செய்யறேன் ? என்றவாறே மனசை தேற்றிக்கொண்டபடியே பராக்கு பார்க்க ஆரம்பித்தான்.. பக்கத்தில் ஒரு  சிறிய தேநீர் கடை. அதில் டீ கிளாஸ் கழுவிக்கொண்டிருந்த பையனிடம்  ஒருவர் , “ ஏம்பா அப்பா இல்ல ? எனக்கேட்டபடியே வந்தார்.


“இல்ல மாமா காலையில நாலு  மணிக்கே  வெளிய போயிட்டாரு. அக்காவோட கல்யாண விஷயமா யாரையோ பார்க்க வெளிய போனாரு, இதோ இப்போ வர நேரந்தான் .. என்ற உரையாடலை கேட்ட படியே நின்ற சித்தார்த்தின் கண் அனிச்சையாக மணி என்ன என துழாவியது..


10 45 ஆகிவிட்டது..இனிமேல் வேலைக்கு செல்வதென்பதும் இயலாத காரியம் என எண்ணி சரி வீட்டிற்கே சென்று விடலாம் என எத்தனித்தவனின் வயிறு பசியால் ஓலமிட்டது. சரி ஒரு டீயை குடிச்சிட்டு போலாம் என டீக்கடைக்குள் சென்றான்.


 “ஏ தம்பி ஒரு டீ போடுடா !“என்றபடி வாசலில் இருந்த ஸ்டூலில் அமர்ந்தான். அவனின் பக்கத்தில் டீக்கடைக்காரை நலம் விசாரித்தவர் அமர்ந்திருக்க,  அவர் மறுபடியும் டீ போடும் பையனிடம்  “ அப்பா இப்ப வந்துருவாருல்ல ? என உறுதிபடுத்திக்கொண்டார்.  “வந்துருவாரு மாமா.. அவர் வந்து என்ன ஸ்கூலுக்கு அனுப்புவாரு ..எனக்கு இன்னைக்கு திருப்புதல் தேர்விருக்கு என்றபடியே , டீயை ஆத்தி சித்தார்த் கையில் கொடுத்தான் .. 


ஏன் மாமா? என்ன விஷயம் ? அப்பாவ தேடுறீங்க ?.. டீ பையன் கேட்க ..


இல்ல காலையில நாலு மணிக்கு தூக்கம் வராம வாச பக்கம் உலாத்திக்கிட்டு இருந்தேன்.,உங்க அப்பா போன மாதிரியே இருந்துச்சா அதுதான் கன்பார்ப்ம் பண்ணதான் கேட்டேன் .


“உங்க அப்பாவை நினச்சா எனக்கு ரொம்ப பாவமா  இருக்குடா. அவன் கஷ்டப்பட்டு உன்னையும் உங்க அக்காவையும் வளர்க்க எவ்வளவு கஷ்டப்படுறான்  தெரியுமா?  வன் உடல்நிலையில அவன் தனியா ஏம்பா போறான் ? 


“என்னக்கூப்பிட்டா நான் துணைக்கு வரமாட்டேன்? சொன்னவர் , இதோ உங்கப்பா வந்துட்டான் .. எனச்சொல்லியப்படியே எழுந்து அவரை எதிர்கொண்டார்.


சித்தார்த்தும் அவரை நிமிர்த்து பார்த்தவன் பதபதைத்து போனான். டீக்கடைக்காரர் முகத்தை மட்டுமே அதுவும் தூரத்திலேர்ந்து பார்த்தவனுக்கு இது பதபதப்பைத்தான் தரும். ஏனென்றால் வந்தவருக்கு முட்டிக்கு கீழ் எதுவுமே இல்லை, சின்ன கோலைஇரு கையிலுமாய் பிடித்து ஊன்றி வந்து கொண்டிருந்தார்.


சித்தார்த் அந்த பையனை நோக்கி .. “அப்பாதான்  உங்கள பார்த்துப்பாரா? உங்களுக்கு. அம்மா இல்ல ?  நான் மூணு வயசு இருக்கும்பொழுதே இறந்து போயிட்டாங்க.. எங்கப்பாதான் என்னையும் எங்கக்காவையும் வளர்த்தாங்க ..

அக்கா படிச்சிட்டு ஒரு கம்பெனியில வேலை பாக்குறாங்க  நான் இந்த வருஷம் பிளஸ் டூ படிக்கிறேன்னா..  அப்பா தினமும் காலையில நாலு மணிக்கெல்லாம் எழுந்து வீட்ல எல்லா வேளையும் பார்த்துட்டு கடைக்கு வந்துடுவாரு …நைட் 10 30 மணிவரைக்கும் கடையில இருப்பாரு “என்றபடி சித்தார்த் கையிலிருந்த டீ கிளாஸை வாங்கியபடியே கடைக்குள் சென்றான்.


இதைக்கேட்ட சித்தார்த்துக்குள் ஒரு புது உத்வேகம் வந்தது . தினமும் அவன் கூறும் சால்சாப்புகள்  அனைத்தும் அந்த டீக்கடைக்காரரின் முன்னால் தோற்று நடனமாடத்துவங்கியது.  வரின் தைரியம் அவனை என்னமோ செய்தது.. 


“சே கடவுள் எனக்கு எல்லாவற்றையும் நல்லாதானே படைச்சிருக்காரு ? 


நான் ஏன் காரணங்களைத்தேடி அலைந்துகொண்டிருக்கிறேன்


நான் நினச்சா சீக்கிரமா கிளம்ப முடியாதா , என்ன ? அவர் அவர்மேல வச்சிருக்கிற நம்பிக்கை  எத்தனை பெரியது ?.. எனக்கு ஏன் அது இல்ல?


 .. எப்படி  இந்த சோம்பேறித்தனம் என்ற அசுரன் என்னை ஆட்கொண்டான் ? 


ஒரு திடீர் தீர்மானத்திற்கு வந்தவனாய் சித்தார்த் அவ்விடத்தைவிட்டு நகரத்தொடங்கினான்.


இனி சித்தார்த்தின் விழிப்பு அலாரம் இல்லாமலேயே நிகழத்தொடங்குமென நம்புவோம்.. நம்பிக்கைதானே வாழ்க்கை!!


(ஆனந்தி ச, பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, கண்டிகை, செங்கல்பட்டு மாவட்டம்)