வங்கக்கடலில் உருவான..காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.. இந்திய வானிலை மையம்!
சென்னை: வங்க கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே ஒரு சில இடங்களில் கோடை வெயில் கொளுத்தி வந்தாலும், ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே நேற்று தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8:30 மணி அளவில் தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, வடக்கு- வடமேற்கு திசையில் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நகரும். அதற்கடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடகிழக்கு திசையில் திரும்பி மத்திய வங்க கடல் பகுதிகளில் படிப்படியாக வலு குறைய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதே சமயத்தில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் இருந்து தென்தமிழகம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 14ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகள் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.