மாறிக்கொண்டே இருப்பதும் மாறாதிருப்பதும் (The ever changing and UnChanging)
- மைத்ரேயி நிரஞ்சனா
நமக்குள் ஒன்று எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கிறது.. நேற்று இருந்த நாம் இன்று இல்லை.. நமது ஆயுள் காலம் 70 என்று கொண்டால்.. பத்து முறை நம் உடல் முழுவதுமாக.. அதாவது ஏழு வருடங்களுக்குள் முழுவதுமாக அதாவது ஒவ்வொரு செல்லும் அழிந்து புதிதாக பிறக்கிறது.. உடற்கூறு அறிவியல் இதைத்தான் சொல்கிறது..(The physiology of human body).
மனிதனுடைய உடல் இவ்வளவு மாற்றம் அடைகிறது என்றால் நமது மனம் அதைவிட நிமிடத்திற்கு நிமிடம் மாறுகிறது காலையில் இருந்த மனம்.. மதியம் வேறு மாதிரியாக மாறி விடுகிறது.. நாம் குழந்தையாக இருந்த பொழுது.. நமது மனம் எவ்வாறு இருந்தது? இன்று போல் அது இல்லை அல்லவா? வாழ்க்கை சூழ்நிலைகளும் அனுபவங்களும் மாற மாற நாம் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறோம்..
காதலனாக இருந்த மனிதன் கணவனாக ஆகும் போது நிச்சயமாக வேறாக தான் ஆகிவிடுகிறான்.. காதலியாக இருந்த பெண் மனைவியாக ஆகும்போது நிச்சயமாக அதே நிலையில் இருக்க வாய்ப்பில்லை.. ஆனால் நமது எதிர்பார்ப்புகள்…பழைய நினைவுகள் தொடர்பானவையே.. பிரச்சனை இந்த மாற்றங்களில் இல்லை.. பிரச்சனை நமது எதிர்பார்ப்பில் உள்ளது.. இந்த மாற்றத்தை.. மாற்றம் ஒன்றே நிலையானது என்ற உண்மையை புரிந்து கொண்டோம் ஆனால்.. நமது எதிர்பார்ப்புகள் எவ்வளவு நியாயமற்றவை என்பதை புரிந்து கொள்வோம்..
ஒரு சிறிய கதையை பார்ப்போமா?
காஷ்முஷ் வியாபார விஷயமாக ரெயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.. அப்போது அவருக்கு எதிர் சீட்டில் ஒரு பெண் இருந்தார்.. அடுத்த ஸ்டேஷன் வந்தவுடன் ஒரு ஆண் அவசரமாக அந்த பெண்ணிடம் வந்து ஏதாவது சாப்பிட வேண்டுமா என்று கேட்டு தண்ணீரும் சாப்பிட ஸ்நாக்ஸ் வாங்கி கொடுத்துவிட்டு சென்றார்..
அடுத்த ஸ்டேஷன் வரும்போது அங்கு ஸ்பெஷலாக என்ன கிடைக்குமோ அதை வாங்கி வந்து கொடுத்துவிட்டு போனார்.. சிறிது நேரம் கழித்து அதற்கு அடுத்த ஸ்டேஷனில்.. அவர் வசதியாக தூங்குவதற்கு படுக்கையை விரித்து கொடுத்து சென்றார்..
காஷ்முஷ்க்கு ஆச்சரியம் தாளவில்லை.. அவர்களுக்குள் என்ன உறவு என்று அறிந்து கொள்ள மிகவும் ஆர்வம் ஆகிவிட்டது.. கொஞ்சம் தயங்கிக்கொண்டே அந்த பெண்ணிடம் கேட்டார்.. அந்த பெண் தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும்.. அவருக்கு இந்த பெட்டியில் டிக்கெட் கிடைக்கவில்லை.. பக்கத்து பெட்டியில் பயணம் செய்வதாக கூறினார்..
காஷ்முஷ் கூறினார்.. உங்கள் இருவரையும் பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக இருந்தது.. அவர் உன்னை பார்த்துக் கொள்ளும் விதம் எவ்வளவு இனிமையானதாக இருக்கிறது.. தயவுசெய்து திருமணம் செய்து கொண்டு விடாதே.. நீங்கள் இருவரும் இவ்வாறே இருங்கள் என்றார்..
அவர் சொல்லுவது உண்மைதானே.. ஒரு பெண்/ஆண் காதலிக்கும் போது அவர்களைப் பற்றியே சிந்திப்பதும்.. அவர்களுக்கு என்ன தேவை என்று கவனிப்பதும் என்று இருப்பவர்கள்.. தனக்குத்தான் சொந்தம் என்று ஆகிவிடும் போது.. எல்லாமே மாறித்தான் விடுகிறது இல்லையா? அவளும்/அவனும் மாறிக்கொண்டே இருப்பதை நாம் கவனிக்க தவறுகிறோம்.. நமது எதிர்பார்ப்பை மட்டுமே அடுத்தவர் மீது திணிக்க ஆரம்பிக்கிறோம்.. ???
((Everything in Universe is in a flux..Matter(incl our body) is not solid nor the Mind))
இந்த மாறிக்கொண்டே இருக்கும் உடலையும் மனத்தையும் உணர்பவர் யார் அல்லது எது? எப்போதும் மாறாத் தன்மையை கொண்டிருக்கும் அந்த விழிப்புணர்வு (Our unchanging center) நம் எல்லாரிடமும் இருக்கிறது.. அதை நாம் மறக்கலாம்.. ஆனால் அது இருக்கிறது.. அதை ஏன் மாறாத தன்மை என்கிறோம் என்றால் அதுவும் மாறினால்.. எப்போதும் மாறிக் கொண்டிருப்பதை எவ்வாறு உணர முடியும்.. நம் குழந்தையாக இருந்த போது வேறு மாதிரியாக இருந்தோம்…இப்போது வேறு மாதிரியாக ஆகி விட்டோம் என்பது உண்மை.. இந்த உண்மையை அறிந்திருக்கும் அந்த பார்வையாளன் அல்லது சாட்சி எது?
இதை நாம் மறக்காமல் அடிக்கடி நினைவு படுத்தி கொண்டிருந்தால்..( It doesn't mean we have to be away from Life..) நாமே மாற்றமும் ஆகி… மாறாததையும் எப்போதும் நினைவு கூர்ந்தோம் ஆனால்.. அந்த சாட்சி (Witness) நமக்குள் நிலைபெறும்..
நாம் தொடர்வோம்…
மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர். ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.