மசோதாவை கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Meenakshi
Nov 20, 2025,05:15 PM IST

சென்னை: மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது ஒப்புதல் அளிக்க வேண்டும்.  அதை விடுத்து கால வரம்பின்றி மசோதாக்களை முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அரசியல் சாசனத்தின்படி எந்த அதிகாரமும் கிடையாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்காமல், கிடப்பில் போட்டு விடுகிறார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து  தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 


அதில், மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு குடியரசு தலைவர் மற்றும் ஆளுநருக்கு நீதிமன்றங்கள் காலக்கெடுவை விதிக்க முடியாது. குறிப்பிட்ட காலவரம்பை நிர்ணயிப்பது அரசியல்  சாசனத்திற்கு எதிரானது. ஆளுநரின் செயல்பாடுகளை நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது. ஒரு மாநிலத்தில் ஆளுநர், அரசு என 2 அதிகார அமைப்புகள் இருக்க முடியாது.




பொதுவாக அமைச்சரவையின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும். மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லை என்றால் அதை அரசிற்கு திருப்பி அனுப்ப வேண்டும். இல்லை என்றால் நிராகரிக்க வேண்டும். அதை விடுத்து கால வரம்பின்றி மசோதாக்களை முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு  அரசியல் சாசனத்தின்படி எந்த அதிகாரமும் கிடையாது என்று உத்தரவிட்டுள்ளது.