பீஷ்மனின் பீடு!

Su.tha Arivalagan
Feb 03, 2026,04:44 PM IST

- எம்.கே. திருப்பதி


தேவ விரதன் ஒரு

தெய்வ புத்திரன் :


தாகம் மோகம் 

தந்தைக்கு ஈந்த 

தனித் திறன்!


கனவில் கொண்டு

கணை எடுத்தான் :

அணை எடுத்தான் :கங்கை 

ஆற்றைத் தடுத்தான்!




மீனவன் நோக்கு ---

மீறுமோ வாக்கு?


"வான் உள்ளவரை 

ஊன் உள்ளவரை 

பேண மாட்டேன் 

பெண்ணின் புணர்ச்சி!"


நவின்றது இப்படி 

நெடியோன் நாக்கு!


வானோர்

வழிபட்டனர் :

பீஷ்மன் என 

புதுப்பேர் இட்டனர்!


தந்தை சந்தனு - இவ்

விந்தை போற்றி 

கொடுத்த வரம் 

கோடியில் ஒன்று!


"நீ அழைக்கும் வரை 

அண்டாது மரணம்: 

மறலி கூட -- உன்

மனதுக்கு திரணம்!"


கோடரி பிடித்த 

பரசுராமன்   குருவானான் :


போட்டியில் குருவை 

அப்புறப்படுத்திய

ஆற்றலின் உருவானான்!


சந்திர குலம் 

சூரியன் போல்

சுடர் விட்டது:

பீஷ்மனின் பீடு இப்படி 

பேச வைத்தது!


இந்து வமிசத்து

இமயக் குன்று :

சத்தியம் தவறா 

சமயக் குன்று!


பாரதப்போரில் 

பார்த்தனுக்கு பகவான் போல்...


தம்பிகளின் சார்பில்

ஆட்சித் தேரை 

அவனே ஓட்டினான்!


இனியவர்களுக்கு -- அவன்

ஏற்றி வைத்த தீபங்களே 

அவனுக்கு

கொள்ளிக்கட்டையாய் மாறின!


காந்தாரியின் வரவு

சகுனியை தந்தது!


அம்பிகை அம்பாலிகையின் 

அழைப்பு...

சிகண்டியாய் சீறியது!


எவரும் வெல்ல முடியா 

அந்த வீரத்தை

சிகண்டிதான் நூறியது!


நீரின் புதல்வன்

தீயில் எரிந்தான்!


கங்கையின் கன்று

கங்கையில் கரைந்தான்!


( இன்று பீஷ்மர் முக்தியடைந்த திருநாள்)


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)