சாண்டா கிளாஸ் (Santa Claus ).. உலகமெங்கும் அன்பை வாரி வழங்கும் கிறிஸ்துமஸ் தாத்தா!
- ஸ்வர்ணலட்சுமி
கிறிஸ்துமஸ் தாத்தா- வெள்ளை தாடியுடன் பரிசுப் பொருட்கள் நிறைந்த மூட்டையை சுமந்து வரும் சாண்டா கிளாஸ் என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஒரு கதாபாத்திரம் ஆகும். ஏனெனில் இவர் டிசம்பர் 24ஆம் தேதி இரவு கிறிஸ்துமஸ் ஈவ் அன்று குழந்தைகளுக்கு பரிசுகளை அள்ளிக் கொடுப்பார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி தரும் பரிசுப் பொருட்களுடன் வரும் ஒரு முதியவர் இந்த சாண்டா கிளாஸ்.
தோற்றம்:
கிறிஸ்துமஸ் தாத்தா என்ற உடன் பருத்த உடல், பனிக்குள்ளாய், கன்ன கதம்புகள், குறும்பு கொப்பளிக்கும் கண்கள், சிகப்பு கம்பளி ஆடை,தோளிலே ஒரு மூட்டை இவைதான் அனைவரின் மனதிலும் ஞாபகம் வரும் இல்லையா.
சாண்டா கிளாஸ் பற்றிய தகவல்களை பார்ப்போமா.
நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த செயின்ட் நிக்கோலஸ் என்ற பிஷப்பை அடிப்படையாகக் கொண்டது கிறிஸ்துமஸ் தாத்தாவின் தோற்றம். சாண்டா கிளாஸ் கருணை மற்றும் ரகசியமாக பரிசளிக்கும் குணங்களுக்கு பெயர் பெற்றவர். இது ஒரு மேற்கு உலக பண்பாட்டு மரபு ஆகும். குழந்தைகளிடம், அன்பையும், மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் பரப்பும் நோக்கில் உள்ளது.
ஆனால் உண்மை என்னவென்றால் நிக்கோலஸ் என்ற புனித பாதிரியார் துருக்கியில் பிஷப்பாக இருந்து பல ஏழைகளின் துயர் துடைத்து வந்தார். இவரின் நினைவாகவே கிறிஸ்துமஸ் தாத்தா பாத்திரம் உருவாயிற்று என்று கூறப்படுகிறது. டாக்டர்.கிள மென்சி மூர் என்பவரே சாண்டா கிளாஸ் எனும் கதாபாத்திரத்தை உருவாக்கினார். முதலில் டச்சு மக்கள் கிறிஸ்துமஸ் தாத்தாவை 'சி ண்டி கிளாஸ்' என்றனர். அதிலிருந்து 'சாண்டா கிளாஸ் 'என்று பெயர் வந்தது. ஆனால் உண்மையில் கிறிஸ்துமஸ் தாத்தாவின் பெயர் "செயிண்ட் நிக்கோலஸ்" ஆகும்.
குழந்தைகளிடம் விருப்பம், அன்பு, நல்லுறவு தாராளமனம் ஆகிய நற்குணங்களுக்கு உரியவர் இந்த செயின்ட் நிக்கோலஸ்.அவர் தனக்கு உரிய பிறந்த நாளன்று டிசம்பர் ஆறாம் நாள் குழந்தைகளுக்கு பரிசுகள் கொடுத்து மிகவும் மகிழ்வார். கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் இந்த சம்பிரதாயம் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.
இங்கிலாந்தில் சாண்டா கிளாஸ் நீண்ட வெள்ளைத்தாடி,சிவப்பு கோட்டு, ரெயின் டீர் என்ற கலைமான் இழுத்து வரும் பனிச்சறுக்கு வண்டியான ஸ்லெட்ஜில் பரிசுகளை முட்டையுடன் ஏந்திபவனி வருவார். குழந்தைகள் அங்கு தங்களுடைய கட்டிலின் கால் மாட்டில் ஸ்டாக்கின்களை தொங்கவிட்டு இருப்பார்கள். அதில் சாண்டா கிளாஸ் புகை போக்கி வழியாக இறங்கி வந்து அதற்குள் பரிசு பொருட்களை போட்டுவிட்டு செல்வார்.இது இங்கிலாந்து குழந்தைகளின் நம்பிக்கை.
ஜப்பானிய குழந்தைகள் சாண்டா கிளாஸ் தாத்தாவை "ஹோட்டியோ ஷோ" என்று அழைப்பார்கள். இவருக்கு பின்னாலும் கண்கள் இருக்கும். எல்லா குழந்தைகளையும் எல்லாம் திசைகளிலும் சாண்டா கிளாஸ் காண்பாராம். டென்மார்க்கில் குழந்தைகள் கிறிஸ்மஸ் தாத்தாவிற்கு,அவருடைய பசிக்கு ஒரு கிண்ணத்தில் பாலும்,ஒரு தட்டில் அரிசி சாதமும் வைப்பார்களாம். எத்துனை அன்பு அவர் மீது குழந்தைகளுக்கு பாருங்கள்..
ஹாலந்து தேசத்தில் (Holland) குழந்தைகள் சாண்டாவை இழுத்து வரும் ரெயின் டீ ர் கலைமானுக்கு உணவாக காரட், வைகோலையும் வைத்து வரவேற்பார்களாம். இவ்வாறு உலகம் முழுவதும் சாண்டா கிளாஸ் மீது குழந்தைகளும், அவர் குழந்தைகள் மீதும் அன்பையும், பாசத்தையும், பரிசுகளையும் அள்ளிக் கொடுத்துக் கொண்டுதான் உள்ளார்கள்.
அனைவருக்கும் தென் தமிழ் சார்பாக கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள். மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.